ஆலங்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
ஆலங்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன் வரவேற்று பேசினார். திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மரு.நமச்சிவாயம் (அறந்தாங்கி), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், ஆலங்குடி நகர செயலாளர் பழனிகுமார், திருவரங்குளம் ஒன்றிய ஆணையர் ஆயிஷாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கி பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் ரூ.3½ லட்சம் மதிப்பிலான பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. முகாமில் சிறப்பு பரிசோதனை செய்து, மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை, ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவு, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பதிவு மற்றும் மறுவாழ்வு உதவிகள் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்றார். இதில் ஆலங்குடி சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் ராஜேஸ்வரி, பேரூராட்சி துணைத் தலைவர் ராஜேஸ்வரி பழனிகுமார், உதவித்திட்ட அலுவலர் தங்கமணி, வட்டார மருத்துவ அலுவலர் ராம்சந்தர், பேரூராட்சி உறுப்பினர்கள் ஆசிரியர் ஞானபிரகாசம், முடநீக்கு வல்லுநர் ஜெகன், நகர துணை செயலாளர் செங்கோல், ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள், 200-க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரெத்தினகுமார் நன்றி கூறினார்.