ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்து எழுந்த தினமான இந்த பண்டிகையையொட்டி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு புதிய ஒளியை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு, சிறப்பு பாடல், திருப்பலி நடைபெற்றது. நேற்று காலை சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. பெரம்பலூர் புனித பனிமய மாதா தேவாலயத்தில், பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குரு ராஜமாணிக்கம் தலைமையில் சிறப்புப் பாடல் திருப்பலி நடைபெற்றது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் பாளையம், அன்னமங்கலம், தொண்டமாந்துறை, பாத்திமாபுரம், திருவாலந்துறை, திருமாந்துறை, செட்டிகுளம், பாடாலூர் ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்களில், அந்தந்த பங்கு பாதிரியார் தலைமையில் ஈஸ்டர் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன.
இதேபோல் அரியலூர் மாவட்டத்திலும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.