3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள்: சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஊட்டி சீனிவாச பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஊட்டி
ஊட்டி சீனிவாச பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
3-வது சனிக்கிழமை
புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகும். இந்த தினத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பெரும்பாலும் இந்த புரட்டாசி மாதம் முழுவதும் இந்து மக்கள் சாத்விக உணவுகளை மட்டுமே உண்பார்கள். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் தங்களால் இயன்ற அளவுக்குப் பெருமாளுக்குப் படையல் போடுவர். வீட்டில் கோவிந்தா கோஷமிட்டு வேங்கடவனை வழிபடுவர். ஒரு சிலர் திருப்பதிக்கு இந்த புரட்டாசி மாதத்தில் சென்று வருவதும் உண்டு.
இதன்படி நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், கோத்தகிரி, ஊட்டி, குன்னூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று காலை முதல் பக்தர்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.
திருக்கல்யாணம்
ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் 3-வது சனிக்கிழமையான நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் வீடுகளிலும் பெண்கள் கோலமிட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதேபோல் அடுத்த வாரம் சனிக்கிழமை கருட சேவை உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது.