வெள்ளகோவில்
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் நாகமநாயக்கன்பட்டியில் மே தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டார்.
கிராமசபை கூட்டம்
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் நாகமநாயக்கன்பட்டியில் மே தினத்தையொட்டி சிறப்பு கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு பேசியதாவது:-
தொழிலாளர் தினமான மே தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் நாகநாயக்கன்பட்டி ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம் நடைபெறுகிறது. நம்முடைய சுற்றுப்புறத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நம் மாநில அரசும், ஒன்றிய அரசும் கிராமங்கள் முன்னேற பல்வேறு வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. மகாத்மா காந்தி கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு என்று கூறியுள்ளார். கிராமம் வளர்ச்சி அடைந்தால்தான் தேசம் வளர்ச்சி அடையும். பொருளாதார சூழ்நிலை காரணமாக மக்கள் நகரத்தை நோக்கி செல்லக்கூடிய நிலை உள்ளது.
மரங்களை வளர்க்க வேண்டும்
50 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்ந்து வருவதால் சுற்றுப்புற சூழல் மற்றும் ஆரோக்கியமாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். காற்றோட்டமான, சுகாதாரமான வாழ்க்கை கிராமத்தில் தான் கிடைக்கிறது. தொடர்ந்து அதை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை ஆங்காங்கே மரக்கன்றுகள் வளர்க்க வேண்டும், இருக்கும் மரங்களை பேணி காக்கவும் வேண்டும். கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி மரங்களை வளர்க்க வேண்டும்.
மக்கள் மரத்தை வளர்த்தால் மரம் மக்களை வளர்க்கும் என்பதை உணர்ந்து மரங்களை வளர்த்தால் இயற்கை நம்மை காக்கும். மழையை தரும். எதிர்கால சந்ததியினருக்கு நல்ல சுற்றுப்புற சூழலை உருவாக்கி தரும். காற்றுமாசுபாடு, சுகாதாரமில்லாத குடிநீர் போன்றவற்றில் இருந்து சுற்றுப்புறத்தை பாதுகாக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.