அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதற்கு அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.;
ஆலோசனை கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது கலெக்டர் விசாகன் பேசியதாவது:-
கல்வி தரத்தில் உயர்ந்த மாவட்டமாக திண்டுக்கல் திகழ வேண்டும். பொதுத்தேர்வுகளில் அனைத்து மாணவ, மாணவிகளும் முழுமையாக தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருக்கின்றன.
சிறப்பு வகுப்புகள்
எனவே பொதுத்தேர்வுக்கு முன்னதாக கூடுதல் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். ஒரு சில தலைமை ஆசிரியர்கள் தற்போது மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் வகுப்புகள் நடத்துகின்றனர். மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட அவர்களை பாராட்டுகிறேன். அதேபோல் அனைத்து தலைமை ஆசிரியர்களும் மாணவ-மாணவிகள் அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பதற்கு சபதம் எடுத்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் விசாகன் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரியங்கா, முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், மாவட்ட கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, திருநாவுக்கரசு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.