ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் தகுதியான பெண்களுக்கு சிறப்பு முகாம்கள்-இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் தகுதியான பெண்களுக்கு சிறப்பு முகாம்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் நடக்கிறது.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம்
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு குடும்ப தலைவிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2 கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளன. முதற்கட்ட சிறப்பு முகாம்களில் 77 ஆயிரத்து 861 விண்ணப்பங்களும், 2-ம் கட்ட சிறப்பு முகாம்களில் 79 ஆயிரத்து 716 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இந்தநிலையில் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
சிறப்பு முகாம்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவிகள், முதியோர் ஓய்வூதிய திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரியாத குடும்ப தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு ஏதேனும் காரணங்களினால் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் உடனடியாக தங்களது ரேஷன் கடை பணியாளருக்கு தெரிவித்து, அவர் மூலம் விண்ணப்பத்தினை பெற்று கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.