போலீஸ் நிலையங்களில் சிறப்பு குறைதீர் முகாம்; 300 மனுக்களுக்கு தீர்வு
தேனி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நடந்த சிறப்பு முகாமில் 300 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
தேனி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நடந்த சிறப்பு முகாமில் 300 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. குறைதீர் முகாம்
சிறப்பு முகாம்
தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகார்க் அறிவுறுத்தலின்பேரில், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், உட்கோட்ட அலுவலகங்களில் நேற்று புகார் மனு மேளா என்ற பெயரில் சிறப்பு முகாம் நடந்தது.
தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் சிறப்பு முகாம் நடந்தது. தேனி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையிலும், பழனிசெட்டிபட்டியில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலும், அல்லிநகரத்தில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலும் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாம்களை துணை சூப்பிரண்டு பார்த்திபன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உஷா தலைமையில் கூட்டம் நடந்தது.
300 மனுக்களுக்கு தீர்வு
கூடலூர் வடக்கு, தெற்கு மற்றும் லோயர்கேம்ப் போலீஸ் நிலையங்கள் சார்பில் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், கணேசன் மூவேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கம்பம் வடக்கு போலீஸ் நிலையம் சார்பில் நடந்த சிறப்பு முகாமில், உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுகுமாரி கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் முகாம் நடந்தது. இந்த முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. ஏற்கனவே பெறப்பட்டு நிலுவையில் இருந்த மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதும் இந்த முகாம்கள் மூலம் ஒரே நாளில் 300 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.