13 அரசு துறைகளில் சார்பில் விவசாயிகளுக்கு ஒரே ஆவணம் வழங்க சிறப்பு முகாம்

விவசாயிகளுக்கு 13 அரசு துறைகளில் சார்பில் ஒரே ஆவணம் வழங்க கிராமங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.

Update: 2023-04-07 20:45 GMT

விவசாயிகளுக்கு 13 அரசு துறைகளில் சார்பில் ஒரே ஆவணம் வழங்க கிராமங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.

ஒரே ஆவணம்

மத்திய-மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதை பெறுவதற்கு விவசாயிகள் அடங்கல், குறு-சிறு விவசாயிகள் சான்று உள்ளிட்ட சான்றுகளை வாங்க வேண்டும். இதற்கு வருவாய்த்துறை, வேளாண்மை உள்ளிட்ட துறைகளின் அலுவலகங்களுக்கு தனித்தனியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதனால் காலதாமதம் ஏற்படுவதோடு, வீண் அலைச்சலும் ஏற்படுகிறது.

இதை தவிர்க்கும் வகையில் வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை, கூட்டுறவு, கால்நடை, பட்டுவளர்ச்சி, வேளாண் விற்பனைத்துறை, விதை சான்றளிப்பு துறை உள்பட 13 துறைகளின் ஆவணங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ஆவணமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக "GRAINS" இணையதளத்தில் விவசாயிகளின் விவரங்களை பதிவேற்றும் பணி நடக்கிறது.

சிறப்பு முகாம்

இதையொட்டி கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. இந்த முகாமில், விவசாயிகள் தாமாக முன்வந்து, ஆதார் எண், தொலைபேசி எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், நில உடமை ஆவணங்களின் நகல் ஆகியவற்றுடன் கிராம நிர்வாக அலுவலகம், வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் பதிவு செய்யலாம். விவசாயிகளின் நில உடைமை விவரங்கள் சரி செய்யப்பட்டு மேற்கண்ட தளத்தில் பதிவேற்றப்படும்.

மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 951 சர்வே எண்கள் பதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இதனால் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகளை துரிதமாக முடிக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் இந்த மாத இறுதிக்குள் பணிகளை முழுமையாக முடிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

எனவே, விவசாயிகள் பல்வேறு அரசு திட்டங்களில் பயன்பெற "GRAINS" இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும். இது தொடர்பாக வேளாண் கூட்டுறவு சங்கம், விவசாயிகள் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண்மை சங்கங்களின் நிர்வாகிகள் தங்களுடைய உறுப்பினர்கள் மற்றும் இதர விவசாயிகளின் விவரங்களை பதிவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்