தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நாளை (சனிக்கிழமை) நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமுக்கு 12 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் வீரபத்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாவட்ட தொழில் மைய மேலாளர் சுவர்ணலதா, தாசில்தார் செல்வக்குமார், வ.உ.சி கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பஸ் வசதி
மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு சமஉரிமை திட்டத்தின் கீழ் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான (18 வயதுக்கு மேற்பட்ட) சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் நடக்கிறது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதுவரை 58 நிறுவனங்கள் பதிவு செய்து உள்ளன. மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 18 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளை வ.உ.சி. கலைகல்லூரிக்கு அழைத்து வருவதற்கு 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒரு பஸ் வீதம் 12 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு காலை சிற்றுண்டி, தேநீர் உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் பங்குபெறும் தனியார் நிறுவன நேர்முக தேர்வுக்கு செல்லும் ஒவ்வொரு பகுதியிலும் சாய்வுதள நடைபாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அடையாள அட்டை
மாவட்டத்தில் 84 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கி உள்ளோம். இன்னும் 16 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களுக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய் துறை மூலம் பட்டா வழங்கப்படும். ஊரகவளர்ச்சி துறை மூலம் வீடுகள், மகளிர் திட்டம் மூலம் சுயஉதவிக்குழு கடன் வழங்கப்படும். வங்கிகடன்களும் வழங்கப்படும். முகாமுக்கு வருபவர்களுக்கு கட்டாயம் வேலை கிடைக்கும். மருத்துவ முகாம்களும் நடைபெறும்.
முகாமில் 1000 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். படித்து வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் அவர்களுக்கு ஏற்ற பணி வழங்குவதற்கான வழிவகை செய்யப்படும். ஏனைய நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் மூலம் அவர்களின் படிப்புக்கேற்ற தொழிற் பயிற்சிகள் வழங்கி தனியாக தொழில் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.