இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் பள்ளி மாணவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் பள்ளி மாணவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுள்ளதாக தூத்துக்குடி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-23 10:51 GMT

தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் பள்ளி மாணவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இது குறித்து தூத்துக்குடி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வங்கி கணக்கு

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் செயல்பட்ட பொதுமக்களுக்கு எளிய முறையில் வங்கி சேவை அளித்து வருகிறது. தற்போது பள்ளி கல்லூரிகள் திறந்த நிலையில் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு விவரங்கள் பள்ளியில் சமர்ப்பிப்பது அவசியம். இதை முன்னிட்டு 10 வயது நிரம்பிய அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களில் இயங்கி வரும் இந்திய தபால் துறையின் வங்கியை அணுகி தங்களின் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். ஆரம்ப நிதியாக ரூ.100 செலுத்தி தொடங்கி கொள்ளலாம். இந்த கணக்கிற்கு இருப்புத் தொகை எதுவும் கிடையாது.

சிறப்பு ஏற்பாடு

இந்த சேமிப்புக் கணக்கு தொடங்க வரும் மாணவர்கள் ஆதார் அட்டை மற்றும் செல்போன் கொண்டு வர வேண்டும். கணக்கு தொடங்கிய பிறகுமாணவர்கள் வங்கி கணக்கு எண், பெயர் விவரம், ஐ.எப்.எஸ்.சி. கோடு : IPOS0000001, எம்.ஐ.சி.ஆர். கோடு : 627768004 போன்ற விவரங்களை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளிகளில், மாணவர்களின் வங்கி கணக்கு சமர்ப்பிக்கும் இணையதளத்தில் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் விவரங்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் பள்ளிகள் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை எளிதாக பதிவேற்றம் செய்ய முடியும்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்தால், தபால் துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து அதிக மாணவர்களுக்கு கணக்கு தொடங்கி தருவார்கள். அதே போன்று நலத்திட்ட உதவித்தொகை பெறும் மாணவர்களும் இந்த வங்கி கணக்கை தொடங்கி பயன்பெறலாம். எனவே தூத்துக்குடி மாவட்டத்தின் பொதுமக்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்