மகாலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

மகாலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

Update: 2022-06-06 13:17 GMT

குன்னுார்

குன்னூர்-கோத்தகிரி சாலையில் சிம்ஸ் பூங்கா அருகே முடியக்கியில் படுகர் இன மக்களின் பூர்வீக கோவிலான மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. சுவாமி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கும் இந்த கோவிலில், ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் வரும் முதல் திங்கட்கிழமை மட்டும் நடை திறந்து, சிறப்பு அபிஷேக, ஆராதனை விழா நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா, இன்று நடைபெற்றது. காலை 7:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கோடமலை கிராமத்தில் முதல் கன்று ஈன்ற மாட்டின் பாலை பச்சை மூங்கிலில் சேகரித்து, அதை கொண்டு மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதே மாட்டின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட நெய் மட்டும் கோவிலில் விளக்கு ஏற்ற பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு ஏற்றப்படும் விளக்கு அணையும் வரை மட்டுமே கோவில் நடை திறந்திருக்கும். அதன்படி ஏற்றப்பட்ட நெய் விளக்கு, 6 மணி நேரம் மட்டுமே எரிந்ததால், அதுவரை மட்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இனி இந்த கோவிலின் நடை அடுத்த ஆண்டு(2023) திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்