இலைக்கருகல் நோய் பாதித்த வாழைகளை சபாநாயகர் அப்பாவு ஆய்வு

களக்காடு பகுதியில் இலைக்கருகல் நோய் பாதித்த வாழைகளை சபாநாயகர் அப்பாவு ஆய்வு செய்தார்.

Update: 2023-01-04 18:53 GMT

களக்காடு பகுதியில் இலைக்கருகல் நோய் பாதித்த வாழைகளை சபாநாயகர் அப்பாவு ஆய்வு செய்தார்.

வாழைகளுக்கு நோய் பாதிப்பு

களக்காடு சாலைப்புதூர், மாவடி திருக்குறுங்குடி, மலையடிபுதூர் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள 5 லட்சம் வாழைகள் இலைக்கருகல் நோயால் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்..

இந்த நிலையில் நேற்று சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் களக்காடு எஸ்.என்.பள்ளிவாசல் மற்றும் திருக்குறுங்குடி பகுதிகளில் பாதிக்கப்பட்ட வாழைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நிவாரணம் வழங்கப்படும்

பின்னர் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-

களக்காடு பகுதியில் வாழைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதை கருத்தில் கொண்டு தான் களக்காட்டில் வாழைத்தார் சந்தை அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சந்தை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. தற்போது களக்காடு பகுதியில் வாழைகளை இருவித நோய்கள் தாக்குகின்றன. வாழையின் மேல்பகுதியில் இருந்து தாக்கும் நோய் கீழ் பகுதி வரை பரவி வருகிறது. அதுபோல கீழிருந்தும் மேல் பகுதி நோக்கி நோய் பரவி வருகிறது.

எவ்வுளவு ஏக்கரில் வாழைகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி, மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய்துறையினர் முழுமையாக கணக்கெடுப்பு நடத்துவார்கள். அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவர்களுடன் சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஷபிர் ஆலம், நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி, களக்காடு தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான ராஜன், மாவட்ட தோட்டக்கலைதுறை இணை இயக்குனர் பாலகிருஷ்ணன், களக்காடு துணை இயக்குனர் சண்முகநாதன், தோட்டக்கலை துறை அதிகாரி இசக்கிமுத்து உள்பட பலர் சென்றனர்.

விவசாயிகள் மனு

மேலும் சபாநாயகர் அப்பாவுவிடம் மாநில விவசாயிகள் சங்க துணை தலைவர் பெரும்படையார், களக்காடு ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முருகன் மற்றும் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

அதில், "களக்காடு பகுதியில் யானை, கடமான், கரடி, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளோம். ஆனால் மனு கொடுத்த விவசாயிகள் மீது வனத்துறையினர் பொய் வழக்கு போடுகின்றனர். இழப்பீடு கேட்ட 10 பேர் மீது கரடியை கொன்றதாக பொய்யான வழக்கு போட்டு, ஜாமீனில் வெளிவந்துள்ளனர். எனவே இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்