கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சபாநாயகர் அப்பாவு திடீர் தர்ணா
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சபாநாயகர் அப்பாவு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
வள்ளியூர்:
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சபாநாயகர் அப்பாவு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஒப்பந்த தொழிலாளர்கள்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 136 தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த புள்ளிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இங்கு 'சி' மற்றும் 'டி' பிரிவில் பணியாற்றுவதற்கு உள்ளூரைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கும், அணுமின் நிலையத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சில இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அணுமின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.
25 தொழிலாளர்கள் பணிநீக்கம்
இந்த நிலையில் ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனமானது 100 சதவீத ஊதியத்தில் 40 சதவீதத்தை கையாடல் செய்து, மீதியுள்ள தொகையையே வழங்குவதாக 25 தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். இதற்கு அணுமின் நிலைய அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அந்த ஒப்பந்த நிறுவனத்தினர் மீது கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அந்த 25 தொழிலாளர்களையும் ஒப்பந்த நிறுவனம் பணி நீக்கம் செய்தது. இதையடுத்து தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் அறிவித்தனர்.
சபாநாயகர் திடீர் தர்ணா
தொடர்ந்து ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தின்போது, ஒரு வாரத்துக்குள் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவதாக அணுமின்நிலைய அதிகாரிகளும், தனியார் ஒப்பந்த நிறுவனத்தினரும் தெரிவித்தனர். ஆனால், இதுவரையிலும் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படவில்லை.
இதனை அறிந்த சபாநாயகர் அப்பாவு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ெஜகதீஷ் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுடன் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு சென்றனர். அங்கு அணுமின் நிலைய வளாக இயக்குனர் பிரேம்குமாரிடம் சபாநாயகர் அப்பாவு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால் சபாநாயகர் அப்பாவு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர் போராட்டம்
இதனை அறிந்த மாவட்ட கலெக்டர் விஷ்ணு செல்போனில் சபாநாயகர் அப்பாவுவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு விரைவில் மீண்டும் பணி வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட சபாநாயகர் அப்பாவு தொழிலாளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பின்னர் சபாநாயகர் அப்பாவு கூறுகையில், ''கூடங்குளம் அணுமின்நிலைய அதிகாரிகளுடன் தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் இணைந்து தொழிலாளர்களின் 40 சதவீத ஊதியத்தை கையாடல் செய்துள்ளனர். இதனை தடுத்து தொழிலாளர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டம் நடத்தப்படும்'' என்றார்.