அருங்காட்சியகம் அமைக்க இடம் ஒதுக்கித்தர வேண்டும்ஜவான்ஸ் அமைப்பினர் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கித்தர வேண்டும் என கன்னியாகுமரி ஜவான்ஸ் அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
நாகர்கோவில்,
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கித்தர வேண்டும் என கன்னியாகுமரி ஜவான்ஸ் அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
இந்த முகாமில் கன்னியாகுமரி ஜவான்ஸ் (இந்திய அனைத்துப் படை வீரர்கள் சார்பாக) அமைப்பு சார்பில் 2 மனுக்கள் தனித்தனியாக அளிக்கப்பட்டன. அவற்றில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வரிவிலக்கு
இந்திய ராணுவத்திலும், துணை ராணுவத்திலும் 45 ஆயிரம் வீரர்களுக்கு மேல் குமரி மாவட்டத்தில் இருந்து நாட்டுக்காக சேவையாற்றி வருகிறோம். குமரி மாவட்டத்தை சேர்ந்த பல ராணுவ வீரர்கள் நாட்டுக்காக வீர மரணம் அடைந்துள்ளனர். அவ்வாறு வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள், வருங்காலத்தில் உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களுடைய தியாகத்தை போற்றும் வகையிலும் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பாக அருங்காட்சியகம் அமைக்க மாவட்டத்தின் மத்திய பகுதியில் அரசுக்கு சொந்தமாக காலியாக உள்ள 1 சென்ட் புறம்போக்கு நிலமாவது கன்னியாகுமரி ஜவான்ஸ் அமைப்பின் பெயருக்கு வழங்கி உதவ வேண்டும். ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களுக்காக வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் இந்த கோரிக்கைகள் குறித்து அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் ஆகியோரை சந்தித்து தங்களது கோரிக்கை குறித்து பேசினார்கள்.
அலை தடுப்புச்சுவர் நீட்டிப்பு
இதேபோல் குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் பொதுச்செயலாளர் சகாயபாபு, பொருளாளர் பிராங்கிளின் ஆகியோர் தனித்தனியாக 2 மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களில் கூறப்பட்டிருப்பதாவது:-
ராஜாக்கமங்கலம் அருகில் உள்ள பெரியகாடு மீனவர் கிராமத்தில் மீன் ஏலமிடும் தளம் அமைந்துள்ளது. இங்கு அலை தடுப்புச்சுவர் வரை மட்டுமே சாலை வசதி உள்ளது. அங்கிருந்து மீன் ஏலக்கூடம் வரையிலான சுமார் 250 மீட்டர் தூரத்திற்கு சாலை வசதி இல்லை. இதன் காரணமாக மீன் வாங்க வரும் மீன் வியாபாரிகள் மீனை கொண்டு செல்ல சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட இடத்தில் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவளம் மீனவர் கிராமத்தில் சேதம் அடைந்த தூண்டில் வளைவு அலை தடுப்புச் சுவரை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் அலைத்தடுப்பு சுவரில் போடப்படும் கற்கள் மிக மிக சிறிய கற்களாக உள்ளன. இந்த கற்களால் அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதத்தில் ஏற்படும் கடல் சீற்றத்தையே தாக்கு பிடிக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் கடல் அலை தடுப்பு சுவர் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே அலை தடுப்புச்சுவரை மேலும் 100 மீட்டர் நீட்டித்தும், 50 மீட்டர் வளைந்தும் தரமான கட்டுமானமாக கட்டினால் மீனவருக்கு பலன் உள்ளதாக அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடை அகற்றம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு கே.பி.ரோட்டில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இதன் அருகில் கல்வி நிறுவனங்கள், பஸ் நிறுத்தம் போன்றவை உள்ளன. இதனால் அந்த வழியாக காலை, மாலையில் ஏராளமான பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள் சென்று வருகிறார்கள். அங்கு குடிமகன்களின் தொல்லை உள்ளது. எனவே மதுக்கடையை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சீராய்வு மனு தாக்கல்
மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ஆராச்சார் நிலம் 50 ஏக்கர் கொண்ட பகுதியாகும். இது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்து. 1978-ம் ஆண்டில் பட்டா ஏ பதிவேட்டில் ஆராச்சார் வகை சொத்து என்றுதான் உள்ளது. இந்த அரசு நிலத்தை தமிழக அரசு மீட்க சட்ட வல்லுனர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்து, முழு முதல் கடமையாக தமிழக முதல்-அமைச்சர் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.