வீரிய ஒட்டுரக கம்பு விதை உற்பத்திக்கான விதைப்பு பணி
ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் வீரிய ஒட்டுரக கம்பு விதை உற்பத்திக்கான விதைப்பு பணி நடந்தது.
ஓட்டப்பிடாரம் வட்டாரம் கீழ செய்த்தலை கிராமத்தில் பால செல்வம் என்ற விவசாயியின் நிலத்தில் வீரிய ஒட்டுரக கம்பு விதை உற்பத்திக்கான விதைப்பு பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சொ.பழனிவேலாயுதம் தலைமை தாங்கினார். கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து வருகை தந்த வேளாண்மை தொழில்நுட்ப வல்லுனர் மவுலி மேற்பார்வையில் இந்த விதைப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் வீரிய ஒட்டுரகமான சி.ஓ.எச்-10 வீரிய ஒட்டு கம்பு விதை உற்பத்தி செய்வதற்கான ஆண் மற்றும் பெண் இன விதைகள் தனித்தனியாக இரு வரிசை, ஆண் ரகமான பி.டி.6679 மற்றும் நான்கு வரிசைகள் பெண் ரகமான ஜெ.சி.எம்.ஏ.10444 விதைப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆண் ரகத்தின் மகரந்தம் பெண் ரகத்துடன் இணைந்து வீரிய ஒட்டு கம்பு உற்பத்தியாகிறது. இதில் இருந்து பெறப்படும் விதைகள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கூறும் போது, 2022-23-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டிருப்பதாலும், இந்த ஆண்டு தொடங்கி ஐந்து ஆண்டுகள் மத்திய-மாநில அரசுகளால் சிறுதானிய இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாலும், இந்த விதை உற்பத்தி நிகழ்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது என்றார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி சிறுதானியங்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் மல்லுசாமி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.