நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் விளையாடினால் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வளரும்
செல்போனில் விளையாடுவதை தவிர்த்து நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் சேர்ந்து விளையாடினால் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வளரும் என்று குமரன் பள்ளி விளையாட்டு விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் பேசினார்.
விளையாட்டு விழா
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா செங்கபள்ளியில் உள்ள ஸ்ரீகுமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீகுமரன் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளிகளின் 13-வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் மணி தலைமை தாங்கினார். ஸ்ரீகுமரன் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ஜெயமுரளி வரவேற்றார்.
பள்ளி செயலாளர் கனிஷ்கா ரெட்டி, காங்கயம் துணை போலீஸ்சூப்பிரண்டு பார்த்திபன், ஸ்ரீகுமரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
ஒலிம்பிக் கொடியை பள்ளி தாளாளர் மணியும், பள்ளியின் கொடியை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் ஆகியோர் ஏற்றிவைத்தனர். குதிரை படை மற்றும் மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் ஒலிம்பிக்தீபத்தை ஏற்றிவைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களின் திறமையை கண்டு களித்த சிறப்பு விருந்தினர் விழா சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை
போட்டிகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் வருத்தப்பட தேவையில்லை. தோல்வியில் இருந்து அனுபவங்களை கற்றுக்கொண்டு மீண்டும் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். வாழ்க்கையில் சிறந்த இடத்தை அடைந்தவர்கள் எல்லாம் தங்களது ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து விடாமுயற்சியின் காரணமாக வெற்றியடைந்துள்ளனர்.
விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவர்களின் உடலை வலிமைப்படுத்துவதுடன் மனதையும், அறிவையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. பள்ளி மாணவர்கள் செல்போனில் விளையாடுவதை விட்டுவிட்டு பள்ளி வளாகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும்போது ஒற்றுமையும் குழுவாக சேர்ந்து விளையாடும் போது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் வளர்கிறது. இது பிற்காலத்தில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை அவர் வழங்கி பாராட்டினார். முடிவில் மெட்ரிக் பள்ளி முதல்வர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை இரு பள்ளிகளையும் சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.