வடபழனி, பாரிமுனை கந்தகோட்டத்தில் சூரசம்ஹார விழா கோலாகலம்

வடபழனி முருகன் கோவில், பாரிமுனை கந்தகோட்டம் உள்ளிட்ட கோவில்களில் சூரசம்ஹாரம் விழா அரோகரா பக்தி கோஷத்துடன் வெகு விமரிசையாக நடந்தது.

Update: 2022-10-31 04:43 GMT

வடபழனி முருகன் கோவில்

சென்னை வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 24-ந் தேதி வினாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. முக்கிய விழாவான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது.

இரவு 7 மணியளவில் அம்பாளிடம் வேல் பெற்ற முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்வதற்காக புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, தெற்கு கோபுர சந்திப்பில் முருகப்பெருமான் படை சூழ, யானை, சிங்கம் உள்ளிட்ட ரூபங்களில் வந்த சூரபத்மனை வேலால் வதம் செய்யும் காட்சி அரங்கேறியது. பிறகு, மாமரமாக மாறிய சூரன், அதை பிளந்தபோது, சேவல், மயிலாக மாறிய காட்சி நடந்தது. அப்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் "அரோகராஅரோகரா" என கோஷம் எழுப்பியதுடன், சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் எல்.ஆதிமூலம், துணை கமிஷனர் முல்லை உள்பட பலர் செய்திருந்தனர்.

கந்தகோட்டம் கந்தசாமி கோவில்

இதேபோல், பாரிமுனை கந்தகோட்டம் முருகன் கோவிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேற்று மாலை 5.30 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவு 7 மணியளவில் சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை ஓய்வுபெற்ற நீதிபதி சித்ரா வெங்கட்ராமன், உதவி கமிஷனர் பாஸ்கரன், செயல் அலுவலர் கொளஞ்சி உள்பட இடைக்கால நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

கபாலீசுவரர் கோவில்

இதேபோல், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நேற்று இரவு 6 மணிக்கு தீபாராதனை, 6.30 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவு 7 மணி அளவில் வடக்கு மாட வீதியில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இணை கமிஷனர் தா.காவேரி செய்திருந்தார்.

சிறுவாபுரி முருகன் கோவில்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சிறுவாபுரியில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலில் நடந்த கந்த சஷ்டி விழாவில் நேற்று முன்தினம் முருக பெருமானுக்கு அபிஷேகமும், மாலையில் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில் எதிரே சன்னதி தெருவில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சித்ராதேவி தலைமையில், கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்