'தமிழக அரசு கோரிய நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்' - முத்தரசன் வலியுறுத்தல்

தமிழக அரசு கோரிய நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-12-04 08:22 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிவாரண நிதியை மத்திய அரசு கடந்த காலங்களைப் போல் புறக்கணிக்காமல், முழுத்தொகையையும் தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"வடகிழக்கு பருவ மழை மற்றும் பெஞ்சல் புயலின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு முதல்-அமைச்சர், துணை முதல-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று பாதிப்புகளை கண்டறிந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

மனித உயிர்கள் இழப்பு, விவசாயம், கால்நடைகள், மற்றும் குடியிருப்புகள் பாதிப்புகளை கணக்கில் கொண்டு நிவாரணங்களையும் முதல-அமைச்சர் அறிவித்துள்ளார். நிவாரண தொகை ஓரளவிற்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும் கூட, உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் என அறிவித்துள்ளதை மறுபரிசீலனை செய்து, ரூபாய் 10 லட்சம் என அறிவிக்க கோருகிறோம். மேலும் விவசாயம் பாதிப்பிற்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரம் என்பதனை மறுபரிசீலனை செய்து ஏக்கர் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூபாய் 25 ஆயிரம் வழங்கிட கேட்டுக் கொள்கிறோம்.

கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்கள் ஆண்டுதோறும் பருவமழை மற்றும் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்களின் குடிசைகளை இழந்து பரிதவிக்கும் அவலமான நிலைக்கு நிரந்தர தீர்வு காண, குடிசையில்லா நிலையை உருவாக்கி கான்கிரீட் வீடுகளை அரசு கட்டிக் கொடுக்கக் கூடிய முறையில் ஓர் விரிவடைந்த திட்டத்தை தயாரித்து செயல்படுத்திட வேண்டுகிறோம்.

மழை, வெள்ளம், புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து, அனைத்து வகை நிவாரண நடவடிக்கையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். பாதிப்பில் இருந்து முழுமையான மீட்பு பணிகளை மேற்கொள்ள, தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிவாரண நிதியினை மத்திய அரசு கடந்த காலங்களைப் போன்று தமிழகத்தை புறக்கணிக்காமல், தமிழ்நாடு அரசு கோரியுள்ள முழுத்தொகையையும் தாமதமின்றி உடன் வழங்கிட வேண்டுகிறோம்."

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்