சென்னை மாநிலக் கல்லூரியில் புதிய விடுதிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
70 அறைகள் கொண்ட 200 மாணவ, மாணவிகள் தங்கும் புதிய விடுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை,
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.21.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதி கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில புதுமைப் பெண் திட்டம்.
அதேபோன்று அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.
சென்னை மாநிலக் கல்லூரியில் 5.07.2022 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 300-க்கும் மேற்பட்ட சிறப்பு மாணவ, மாணவியர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து இங்கே வந்து, தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தேவையான வசதிகளுடன் கூடிய விடுதிகள் இல்லாத காரணத்தால். சிறப்பு மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு வசதிகளுடன் மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே அவர்களுக்கு விடுதி அமைத்துத் தரப்படும் என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 21 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றைய தினம் திறந்து வைத்து, அங்கிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
முதல்-அமைச்சருடன், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.