பெண் கொலை வழக்கில் மருமகன் கைது

வாணியம்பாடி அருகே நடந்த பெண் கொலை வழக்கில் அவருடைய மருமகன் கைது செய்யப்பட்டார். பாலியல் பலாத்காரம் செய்ததை வெளியில் சொல்லி விடுவேன் என்று கூறியதால் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2023-09-01 19:00 GMT

பெண் கொலை

வாணியம்பாடி அருகே உள்ள துருஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (வயது 55). இவரது மனைவி மங்கம்மாள் (51). இவர் அருகில் உள்ள காப்புகாடு பகுதியில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் விசாரணை நடத்தினார். பின்னர் கொலையாளிகளை பிடிக்க வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சதீஷ்குமார், கிருபானந்தம், விக்னேஷ் ஆகியோர் அடங்கிய ஒரு தனிப்படையும், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தேசிங்கு தலைமையில் போலீசார் அய்யப்பன், கமல், தமிழ்மாறன் ஆகியோர் கொண்ட ஒரு தனிப்படையும் அமைத்து உத்தரவிட்டார்.

மருமகன் கைது

தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி அதேப்பகுதியை சேர்ந்த, மங்கம்மாளின் உறவினரான சங்கர் (35) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட மங்கம்மாள், கைதுசெய்யப்பட்ட சங்கரின் மாமா மனைவியாகும்.

இதுகுறித்து சங்கர் கூறியதாக போலீசார் கூறியதாவது:-

மங்கம்மாளுக்கு ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மங்கம்மாள் தன்னுடைய கள்ளகாதலனை காட்டுப்பகுதிக்கு வரசொல்லிவிட்டு தனியாக காட்டுக்கு விறகு வெட்ட சென்றுள்ளார். மங்கம்மாள் தனியாக செல்வதை பார்த்த சங்கர் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

பாலியல் பலாத்காரம்

காட்டுப்பகுதிக்கு சென்றதும், மங்கம்மாளிடம் மற்றவருக்கு சந்தோஷம் கொடுப்பது போல் என்னுடனும் இரு என வற்புறுத்தி உள்ளார். இதற்கு மங்கம்மாள் நீ எனக்கு உறவினர். மேலும் உனக்கு வயது குறைவாக உள்ளது. அதனால் முடியாது என்று கூறியுள்ளார். மீறி தொந்தரவு கொடுத்தால் நான் ஊரில் சொல்லிவிடுவேன் என்று கூறியிருக்கிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர் வலுக்கட்டாயமாக அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இது தொடர்பாக மங்கம்மாள் உறவினர்களிடம் சொல்லிவிட்டால் ஊரில் தலை காட்ட முடியாது என்று நினைத்து மங்கம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

நகை பறிமுதல்

சங்கர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார், சங்கரை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த கொலைக்கு பயன்படுத்திய துண்டு, விறகு வெட்ட பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு, கம்மல், தாலி, செல்போன் ஆகியவற்றையும் போலீசார் அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்