மதுரை ராணுவ வீரர் பற்றிய உருக்கமான தகவல்கள்

காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பற்றிய உருக்கமான தகவல்கள் தெரியவந்துள்ளன. அவரது கிராமம் சோகத்தில் முழ்கியது.

Update: 2022-08-11 20:26 GMT


காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பற்றிய உருக்கமான தகவல்கள் தெரியவந்துள்ளன. அவரது கிராமம் சோகத்தில் முழ்கியது.

ராணுவ முகாம் மீது தாக்குதல்

காஷ்மீரில் ரஜோரி நகருக்கு அருகே உள்ள ராணுவ முகாம் மீது நேற்று அதிகாலையில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். ராணுவ வீரர்கள் ஆக்ரோஷ பதிலடி கொடுத்தனர். இந்த சம்பவத்தில் 4 ராணுவ வீரர்கள் பலியானார்கள். தீவிரவாதிகள் 2 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இ்ந்த சம்பவத்தில் தேசத்துக்காக உயிர்த்தியாகம் செய்த 4 ராணுவ வீரர்களில் ஒருவர், மதுரை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 24) என தெரியவந்தது.

இதுபற்றிய தகவல்கள் வருமாறு:-

கிராமமே சோகமயமாகியது

லட்சுமணனின் சொந்த ஊர் திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டி ஆகும். அவருடைய பெற்றோர் தர்மராஜ்-ஆண்டாள்.

இந்த தம்பதியின் மூத்த மகன் ராமர். பி.பி.ஏ. படித்து உள்ளார். இளைய மகன்தான் லட்சுமணன். ராமர், லட்சுமணன் இரட்டையர்கள்.

லட்சுமணன் பி.காம். படித்தவர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து, ரைபிள்மேனாக பணியாற்றி வந்தார். லட்சுமணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

அவர் தற்போது காஷ்மீர் ரஜோரியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராணுவ முகாமில் வேலைபார்த்தார். இந்தநிலையில்தான் நேற்று அதிகாலை நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் அவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுபற்றிய தகவலை நேற்று மதியம் அவருடைய குடும்பத்தினருக்கு ராணுவ அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து, அவருடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். கிராமமே சோகமயமாகியது. ஏராளமானோர் அவரது வீட்டு முன்பு திரண்டு அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறிய வண்ணம் இருந்தனர்.

15 நாட்களுக்கு முன்பு...

ராணுவ வீரர் லட்சுமணன் கடைசியாக 2 மாத விடுமுறையில் ஊருக்கு வந்துவிட்டு, கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் பணிக்கு சென்றுள்ளார். அவ்வப்போது குடும்பத்தினரிடம் போனில் பேசி இருக்கிறார். இந்தநிலையில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மரணம் அடைந்துவிட்டார் என்ற தகவல் அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மேலும் லட்சுமணனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக ராணுவத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

குடும்பத்தினர் உருக்கம்

லட்சுமணன் குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், "சிறு வயது முதலே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக சேவையாற்ற வேண்டும் என்பது லட்சுமணனின் கனவாக இருந்தது. அதற்காக அவர் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு ராணுவ பணியில் சேர்ந்தார். தற்போது அவர் தேசத்துக்காக உயிர்த்தியாகம் செய்துள்ளார்," என உருக்கமுடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்