70 சதவீத மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 70 சதவீத மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-30 12:41 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 70 சதவீத மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்

தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் முதல்- அமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 குதிரை திறன் வரையிலான மின்கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் முதல் தவணையாக சூரிய சக்தியால் இயங்கும் 2000 பம்பு செட்டுகள் ரூ.43 கோடியே 55 லட்சத்து 60 ஆயிரம் மானியத்தில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள பாசன ஆதாரத்தில் அல்லது கிணற்றில் டீசல் என்ஜீன் பயன்படுத்தி வரும் பட்சத்தில் அதற்கு மாற்றாக இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்புkdகோரி ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள் முன்னுரிமையை துறக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும் பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்திட வேளாண்மைப் பொறியியல் துறை உபகோட்டங்களில் விண்ணப்பம் அளிக்கும் போது சூரியசக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்திட உறுதிமொழி அளித்திட வேண்டும்.

தடையில்லா சான்று

வேளாண் பணிகளுக்கு ஆற்றுப்படுகை மற்றும் நீர் நிலைகளில் இருந்து 200 மீட்டருக்குள், கான்கீரிட் கரை இடப்படாத கால்வாய்களில் இருந்து 50 மீட்டருக்குள் நிலத்தடி நீரை இறைப்பதற்கு அனுமதி கிடையாது.

மேற்கண்ட தொலைவிற்குள் நிலத்தடி நீரை இறைக்க வேண்டுமானால் பொதுப்பணித்துறையிடமிருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும். மேலும் இத்திட்டத்தின் கீழ் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற திருவண்ணாமலை, கீழ்பென்னத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், கலசபாக்கம், போளுர் தாலுகா விவசாயிகள் திருவண்ணாமலை வேங்கிக்கால் வானவில் நகரில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினையும், ஆரணி, செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு தாலுகா விவசாயிகள் ஆரணி மில்லர்ஸ் சாலையில் உள்ள வேளாண் வணிக விற்பனை மைய வளாகத்தில் செயல்படும் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினையும், மாவட்ட அளவில் வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தையும் அணுகலாம்.

மேலும் விவரங்களை www.pmkusum.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறுப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்