காய்கறிகளை பதப்படுத்த சோலார் குளிர்பதன கிடங்கு
கூடலூர் உழவர் சந்தையில் காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை பதப்படுத்தி சேமித்து வைத்து விற்பனை செய்யும் வகையில் சோலார் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
கூடலூர்
கூடலூர் உழவர் சந்தையில் காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை பதப்படுத்தி சேமித்து வைத்து விற்பனை செய்யும் வகையில் சோலார் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
சோலார் குளிர்பதன கிடங்கு
கூடலூர் பகுதியில் பாகற்காய், மேரக்காய், பயறு வகைகள், பஜ்ஜி மிளகாய், நேந்திரன் வாழை உள்பட பல்வேறு காய்கறி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் அறுவடை செய்யப்படும் காய்கறி வகைகள் பெரும்பாலும் அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை வீழ்ச்சி ஏற்படும் காலங்களில், காய்கறிகளை சேமித்து வைப்பதற்கு போதிய வசதிகள் இல்லை. இதனால் அன்றைய விலை நிலவரப்படி குறைந்த விலைக்கு விளைபொருட்களை விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் சிறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், கூடலூர் உழவர் சந்தையில் புதிதாக சூரிய சக்தியில் (சோலார்) செயல்படும் வகையில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
5 ஆயிரம் கிலோ காய்கறிகள்
இதுகுறித்து வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
சோலார் குளிர்பதன கிடங்கில் 5 ஆயிரம் கிலோ காய்கறி உள்ளிட்ட விளைபொருட்களை பதப்படுத்தி வைக்க முடியும். பின்னர் தேவையான நேரத்தில் விற்பனை செய்து கொள்ளலாம். இதேபோல் உழவர் சந்தையில் அமைக்கப்பட்டு உள்ள விற்பனை நிலையங்களில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்து கொள்ள ஏதுவாக தங்களின் சிட்டா அடங்கல், ஆதார், ரேஷன் கார்டு மற்றும் புகைப்படத்துடன் கூடலூர் உழவர் சந்தை நிர்வாக அலுவலர்களை நேரில் அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை உழவர் சந்தை மூலம் நேரடியாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்து நல்ல லாபம் பெறலாம். மேலும் பொதுமக்களுக்கும் தரமான காய்கறிகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, கூடலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் உழவர் சந்தை மற்றும் குளிர்பதன கிடங்கை பயன்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.