ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் - சங்கத்தலைவர் தற்காலிக பணி நீக்கம்.

ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் - சங்கத்தலைவர் தற்காலிக பணி நீக்கம்.

Update: 2023-05-20 10:29 GMT

சேவூர்,

சேவூர் அருகே, ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி கூட்டுறவு சங்க தலைவர் பதவியில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்து திருப்பூர் மண்டல இணைப்பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், சேவூர் அருகே ஆலத்தூரில் சி.சி.2350 ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் ஒரு முழு நேர நியாயவிலைக்கடையும், இரண்டு பகுதி நேர நியாய விலைக்கடைகளும் செயல்பட்டு வருகிறது.இச்சங்கத்த்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் அவினாசி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அ.தி.மு.க. வை சேர்ந்த ஏ.ஏ.கருப்பசாமி கடந்த 10 ஆண்டுகளாக தலைவராக இருந்து வருகிறார்.

கையிருப்பு தொகை

இந்நிலையில், சங்கத்தின் கையிருப்புத் தொகையை சங்க துணை விதிகளுக்கு உட்பட்டு பேணப்படாதது, மாதந்தோறும் சங்க நிதியில் ரூ.2365 செலவு மேற்கொண்டது, சங்க கடனுக்காக பணம் செலுத்திய உறுப்பினர்களுக்கு போலி இரசீதுகள் வழங்கியது, இ.சேவை மையத்தில் மிக குறைவாக சேவை வழங்கியது, சங்க ரொக்க புத்தகத்தில் வழக்கறிஞர் கார் வாடகை என்று செலவுத் தொகை ரூ.3000 க்கு செலவு இரசீது இல்லாமல் செலவு செய்ததது, சங்கத்தின் மாதாந்திர வரவு செலவுகளின் துணை விதி 2 (ஆ1) படி அங்கீகரிக்காமல் நிர்வாக குழுவின் கடமைகளிலிருந்து தவறி செயல்பட்டது, அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு லஞ்சம் பெற்றது, உறுப்பினரின் பங்குத்தொகை மற்றும் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வசூல் தொகை ரூ.4045 ஆனதை உறுப்பினர் பங்கு அணாமத்து கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு தீர்மானம் இயற்றி அங்கீகாரம் செய்யத் தவறியது, தாட்கோ மத்திய காலக்கடனில் தவணை தவறிய கடன் தொகைகளை வசூல் செய்யாமல் சங்கத்திற்கு நிதியிழப்பு ஏற்படுத்தியது, உறுப்பினர்களுக்கு கே.சிசி கடன் வழங்குவதில் சொந்தக் காரணங்களுக்காக கால தாமதம் ஏற்படுத்தியது, சரக்ரீட்டுக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்காமல் சங்கத்திற்கு நிதியிழப்பு ஏற்படுத்தியது,

தற்காலிக பணி நீக்கம்

தவறுகளை தட்டிக்கேட்பவர்களை பி.சி.ஆர்.புகார் செய்து விடுவதாக மிரட்டுவது போன்ற பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் விசாரணை குழு மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் புகார்கள் உண்மை என உறுதியான நிலையில் சங்கத்தின் தலைவர் தொடர்ந்து பதவியில் நீடிக்கும் பட்சத்தில் சங்க செயல்பாட்டிற்கு குந்தகம் ஏற்படும் என்று, சங்கத்தலைவரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஏ.கருப்புசாமியை 1983 -ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 75 (ஏ) ன் கீழ் தற்காலிக பதவி நீக்கம் செய்யுமாறு திருப்பூர் மண்டல துணைப்பதிவாளர் சொ.சீனிவாசன் ஆணையிட்டுள்ளார்.பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் புகார்கள் உறுதி செய்யப்பட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஏ.கருப்புசாமி கூட்டுறவு சங்க தலைவர் பதவியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்