மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 1.60 கோடி பேர் பயனடைந்துள்ளனர்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 1.60 கோடி பேர் பயனடைந்துள்ளனர்

Update: 2023-06-19 19:43 GMT

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் புற்று நோயை கண்டறியும் ஸ்கேன் வசதி தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 1.60 கோடி பேர் பயனடைந்துள்ளனர் என்றார்.

அடிக்கல் நாட்டுவிழா

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.42 கோடியில் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புற்று நோய் சிகிச்சை மையம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.10 கோடி மதிப்பிலான புற்று நோயை கண்டறியும் நவீன ஸ்கேன் வசதி தொடக்க விழா, பூதலூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு புதிய கட்டிட திறப்பு விழா தஞ்சையில் நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார். அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் வரவேற்றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

விழாவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டியும், புதிய ஸ்கேன் வசதியை தொடங்கி வைத்தும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை 18 மாதங்களில் கட்ட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், 15 மாதங்களில் கட்டி திறக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதனால், இந்தியாவில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக விளங்கி வருகிறது.

1.60 கோடி பேர் பயன்

கொரோனாவை விரட்டியதற்கு முக்கிய பங்கு தடுப்பூசி தான். நாட்டிலேயே தமிழகம் தான் அதிகளவில் தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களில் முதன்மையாகவும், முன்மாதிரியான மாநிலமாகவும் விளங்கியது. கொரோனா நேரத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 1.60 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்களை காக்க இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை உருவாக்கினோம். அதன் மூலம், 1.65 லட்சம் பேர் இதுவரை பயனடைந்துள்ளனர். புற்றுநோயை கண்டறியும் வகையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பெட் ஸ்கேன் கருவி தஞ்சை மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.46 கோடி மதிப்பீட்டில், புதிய புற்றுநோய் சிகிச்சை மையம் அமையப்பட உள்ளது. இக்கட்டிடம் ஒராண்டில் கட்டி முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், தமிழகத்தில் புற்று நோயை துல்லியமாக கண்டறியும் அதிநவீன கருவியான பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி ஸ்கேன் 2 அரசு மருத்துவமனைகளில் தான் இருந்தது. இதனை மேலும் 5 அரசு மருத்துவமனைகளில் தொடங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி திருநெல்வேலியில் தொடங்கப்பட்டது. 2-வதாக தஞ்சையில் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இந்த கருவி மூலம் ஒரு பரிசோதனைக்கு ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தில் இலவசமாகவும், ரூ.11 ஆயிரம் கட்டணம் செலுத்தியும் பரிசோதனை செய்து கொள்ளலாம். தஞ்சையில் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் அருகில் உள்ள 8 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயனடைவர்.

10 நாட்களில் தொடங்கப்படும்

அடுத்தகட்டமாக சேலம், கோவை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் இன்னும் 10 நாட்களுக்குள் தொடங்கப்படும். இதன் மூலம் 7 இடங்களில் புற்று நோயை கண்டறியும் வசதி இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 ஆண்டுகளில் 500 புதிய கட்டிடங்களை கட்டிக்கொடுத்துள்ளார். அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 60 கட்டிடங்கள் கட்டி திறக்கப்பட்டுள்ளன.

விரைவில் திறக்கப்படும்

தஞ்சை மாநகராட்சியை பொறுத்தவரையில் நகர்ப்புற நலவாழ்வு மையம் 12 அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு 6 மையங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 மையங்களும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதுவும் விரைவில் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மேயர்கள் சண்.ராமநாதன், சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மருத்துவ கண்காணிப்பாளர் ராமசாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்