பீகாரில் இருந்து சென்னைக்கு ரெயிலில் ரூ.1 கோடி கஞ்சா ஆயில் கடத்தல் - பெண் உள்பட 3 பேர் கைது
பீகாரில் இருந்து சென்னைக்கு ரெயிலில் ரூ.1 கோடி கஞ்சா ஆயில் கடத்திய பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் ரம்யாபாரதி மேற்பார்வையில் புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் உதவி கமிஷனர்கள் செம்பேடு பாபு, அழகேசன், தமிழ்வாணன், இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ரெயிலில் இருந்து இறங்கி வந்த பெண் உள்பட 3 பேரை மடக்கி விசாரித்தனர். சந்தேகத்தின்பேரில் அவர்களிடம் இருந்த உடைமைகளை சோதனை செய்தனர். அதில் கஞ்சா மற்றும் கஞ்சா ஆயில் இருப்பது தெரிந்தது. பெண் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் செம்பியம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், நேபாளத்தை சேர்ந்த ராம் சந்திரன் (வயது 35), முஸ்கான் ஜா (20) மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திர குமார் (30) என்பதும், இவர்கள் பீகாரில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா மற்றும் கஞ்சா ஆயிலை சென்னைக்கு கடத்தி வந்து விற்று வந்ததும் தெரிந்தது.
இதுகுறித்து இணை கமிஷனர் ரம்யாபாரதி கூறும்போது, "கைதான 3 பேரிடமும் 20 கிலோ கஞ்சா மற்றும் 300 மில்லி கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடி இருக்கும். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை தேடி வருகிறோம். விரைவில் அவர் கைது செய்யப்படுவார்" என்றார்.