மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது
கோவில்பட்டியில் மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்தூராஜன், தலைமை காவலர் கந்த சுப்பிரமணியன் ஆகியோர் ரேசன் பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கோவில்பட்டி வேலாயுதபுரம்-மூப்பன்பட்டி ரோட்டில் வாகன சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் அதற்கு பின்னால் வந்த மினி லாரியையும் நிறுத்தினர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் கோவில்பட்டி மறவர் காலனியைச் சேர்ந்த லுக்கா அசாரியா மகன் முத்துமாரியப்பன் (வயது 33) என்பதும், மினி லாரியை ஓட்டி வந்தவர் கோவில்பட்டி செக்கடி 3-வது தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் விக்னேஷ் (32) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் மோட்டார் சைக்கிள் மற்றும் மினிலாரியில் இருந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட மொத்தம் 26 மூட்டைகளில் சுமார் ஆயிரத்து 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரேஷன் அரிசி முட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.