மின்னல் தாக்கி தொழிலாளி, பள்ளி மாணவன் பரிதாப சாவு

ஆலங்குளம் பகுதியில் நேற்று ஆலங்கட்டியுடன் மழை பெய்தபோது வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் பள்ளி மாணவனும், தொழிலாளியும் பரிதாபமாக இறந்தனர். சிறுவன் உள்பட 2 பேர் மயக்கம் அடைந்தனர். மேலும் 3 ஆடுகளும் பலியானதால் சோகம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-04-05 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் பகுதியில் நேற்று ஆலங்கட்டியுடன் மழை பெய்தபோது வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் பள்ளி மாணவனும், தொழிலாளியும் பரிதாபமாக இறந்தனர். சிறுவன் உள்பட 2 பேர் மயக்கம் அடைந்தனர். மேலும் 3 ஆடுகளும் பலியானதால் சோகம் ஏற்பட்டுள்ளது.

கோடை வெயில்

கோடை காலம் என்பதால் தற்போது வெயில் வெளுத்து வாங்குகிறது. சில மாவட்டங்களில் 100 டிகிரியை வெயில் தாண்டியதால் வெப்பம் தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் கடும் வெயில் வாட்டி எடுக்கிறது.

மதிய வேளையில் பொதுமக்கள் சாலைகளில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

திடீர் மழை

இந்தநிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன் பரவலாக மழை பெய்தது. மிதமான மழை பெய்தாலும் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் இருந்தது.

திடீர் கோடை மழையினால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்தொடங்கியது. சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக வள்ளியூர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் வாழைகள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன. தென்காசி அருகே பழமையான ஆலமரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆலங்கட்டியுடன்...

இந்த நிலையில் ஆலங்குளம் பகுதியில் நேற்று பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். தொடர்ந்து மாலை 5.15 மணியளவில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை சுமார் 5 நிமிடம் பெய்தது.

அதைத்தொடர்ந்து பெய்த ஆலங்கட்டி மழை சுமார் 20 நிமிடம் நீடித்தது. அப்போது தெருக்களில் விழுந்த ஆலங்கட்டிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் கையில் எடுத்து பார்த்து மகிழ்ந்தனர்.

கோடை வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் திடீரென பெய்த மழை காரணமாக ஆலங்குளத்தில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

தொழிலாளி

இந்தநிலையில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் தொழிலாளியும், பள்ளி மாணவனும் இறந்தனர். இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஆலங்குளம் அருகே ஆணையப்பபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சொள்ளமாடன் (வயது 49).

இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மேலும் ஆடுகள் வளர்த்தார். வேலை முடிந்த பின்னர் மாலை வேளையில் ஆடுகளை வயல்வெளிகளில் மேய்ச்சலுக்கு அழைத்துச் ெசல்வது வழக்கம்.

மின்னல் தாக்கி பலி

அதேபோல் நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது அவருடன், உறவினர்களான அதே ஊரைச் சேர்ந்த நாராயணன் (40), குமரேசன் மகன் சசிதரன் (16) ஆகியோர் தங்களது ஆடுகளையும் மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்றனர்.

3 பேரும் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது பலத்த மழை பெய்தது. திடீரென இடியுடன், மின்னல் தாக்கியது. அது ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 3 பேர் மீதும் விழுந்தது. மின்னல் தாக்கியதில் 3 பேரும் மயங்கி விழுந்தனர். இதனைக்கண்டதும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, சொள்ளமாடன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

3 ஆடுகள் செத்தன

நாராயணன், சசிதரன் ஆகிய இருவரும் சிறிது நேரத்தில் மயக்க நிலையில் இருந்து எழுந்து உயிர் பிழைத்தனர். தொடர்ந்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மின்னல் தாக்கியதில் 3 ஆடுகளும் செத்தன. இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் விசாரணை

இதற்கிடையே ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் இருந்த சொள்ளமாடன் உடலை மீட்ட கடையம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவர்

இதேபோல் ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் வேலாயுதம். விவசாயியான இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர்.

இவர் 15-க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு துணையாக மூத்த மகன் தேவ் ஆனந்த் (17) இருந்து வந்தார். தேவ் ஆனந்த் அங்குள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று இறுதி தேர்வு எழுதியுள்ளார்.

பரிதாப சாவு

தேவ் ஆனந்திற்கு விடுமுறை என்பதால் நேற்று வழக்கம்போல் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். ரெட்டியார்பட்டி ஊருக்கு வெளிப்புறம் உள்ள குளத்தில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மழை பெய்தது.

திடீரென மின்னல் தேவ் ஆனந்த் மீது தாக்கியதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேவ் ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்