விண்ணை தொடும் பூக்கள் விலை; இல்லத்தரசிகள், வியாபாரிகள் கருத்து

விண்ணை தொடும் பூக்கள் விலை குறித்து இல்லத்தரசிகள், வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-12-30 18:45 GMT

விழா காலங்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்வது வழக்கம். தற்போது மார்கழி மாதம் என்பதாலும், புத்தாண்டு, சபரிமலை சீசன் போன்ற விசேஷ நாட்கள் இருப்பதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் வடகிழக்கு பருவமழை மற்றும் பனிமூட்டம் காரணமாக பூக்களின் விளைச்சல் குறைந்து விட்டது.

இதனால் நெல்லையில் மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கும், பிச்சி பூ கிலோ ரூ.1,500-க்கும் விற்பனையாகிறது. பொங்கல் பண்டிகை வரையிலும் இந்த விலை உயர்வு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூக்களின் விலை உயர்வு குறித்து பூ வியாபாரிகளும், இல்லத்தரசிகளும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விபரம் வருமாறு:-

சீசன் இல்லாத பூக்கள்

நெல்லை பூ வியாபாரி சாய் சத்யா:-

பெண்கள் அதிகம் விரும்பும் பூக்களான மல்லிகை, பிச்சி போன்றவற்றுக்கு தற்போது சீசன் கிடையாது. இதனால் பூக்களை தொடுத்து விற்பனை செய்யும் வியாபாரிகள் 50 பூக்களை ரூ.50 வரையிலும் விற்கிறார்கள். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் தேவைக்கு வாங்குவதற்காக நெல்லை சந்திப்பு கெட்வெல் பூ மார்க்கெட்டுக்கு நேரில் வருகின்றனர். ஆனால் இங்கும் பூக்களின் விலை அதிகமாகவே உள்ளது.

இதனால் அவர்கள் மாற்று பூக்களை தேர்வு செய்து வாங்கி செல்கிறார்கள். அதன்படி ஒசூர் ரோஜா, செவ்வந்தி மற்றும் பிச்சி பூ போன்று தோற்றம் அளிக்கும் மணம் வீசாத காக்கட்டான் போன்ற பூக்களை வாங்கி செல்கின்றனர். இதனால் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

பனிப்பொழிவு

நெல்லை பூ கமிஷன் கடை வியாபாரி ரமேஷ்:-

நெல்லை, தென்காசி மாவட்டங்களை பொறுத்தவரை மழைக்காலத்தில் பிச்சி, வெயில் காலத்தில் மல்லிகை, பனிக்காலத்தில் காக்கட்டான் பூக்கள் சீசன் ஆகும். தற்போது மழைக்காலம் முடிவடைந்து பனிப்பொழிவு இருப்பதால் மல்லிகை பூக்கள் வரத்து குறைந்து விட்டது. இதனால் அவற்றின் விலை 1 கிலோவுக்கு ரூ.2 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது. பிச்சி பூக்கள் கிலோவுக்கு ரூ.1,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. காக்கட்டான் பூக்களும் கிலோவுக்கு ரூ.500 வரை விற்பனை ஆகிறது.

நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டுக்கு வழக்கமாக தாழையூத்து, அலவந்தான்குளம், மானூர், குப்பனாபுரம், பள்ளமடை மற்றும் சுற்று வட்டார கிராம பகுதி தோட்டங்களில் இருந்து பூக்களை விவசாயிகள் கொண்டு வருவார்கள். அங்கு தற்போது பனிப்பொழிவால் விளைச்சல் பாதித்து உள்ளது. அதேநேரத்தில் சங்கரன்கோவில், சுரண்டை, புளியங்குடி பகுதியில் இருந்து குறைந்த அளவு வருகிறது. இதுவே விலை உயர்வுக்கு காரணம். மேலும் தற்போது முகூர்த்த நாட்கள், பண்டிகை காலமாக இருப்பதால் பெண்கள் அதிகளவு பூக்களை வாங்கி செல்கிறார்கள். பொங்கல் பண்டிகை முடிவடைந்து பிப்ரவரி மாதம் பூக்களின் விலை கட்டுக்குள் வரும்.

தென்காசியில் மல்லிகை ரூ.2 ஆயிரம்

தென்காசி பூ வியாபாரி தங்கராஜ்:-

பனிப்பொழிவால் வரத்து குறைவு காரணமாகவும், பண்டிகை காலம் என்பதாலும் பூக்களின் விலை அதிகரித்து வருகிறது. தென்காசியில் ஒரு கிலோ மல்லிகை ரூ.2 ஆயிரத்துக்கும், பிச்சி ரூ.1,100-க்கும் விற்பனையாகிறது. இதேபோன்று செவ்வந்தி ரூ.110-க்கும், கேந்தி ரூ.20-க்கும், ரோஜா ரூ.40-க்கும், பெங்களூரு ரோஜா ரூ.150-க்கும் விற்பனையாகிறது.

தண்ணீர் தேவை அதிகம்

சங்கரன்கோவில் கண்டிகைபேரி விவசாயி மாரியப்பன்:-

நான் கடந்த 35 ஆண்டுகளாக பூக்களை சாகுபடி செய்து வருகிறேன். தற்போது மல்லிகை, கேந்தி பயிரிட்டுள்ளேன். பூஞ்செடிகள் பயிரிடுவதற்கு செலவு அதிகமாகிறது. தண்ணீரும் அதிகம் தேவைப்படுகிறது. தற்போது பனிக்காலம் என்பதால் பூக்களின் விளைச்சல் பெரிதும் குறைந்துள்ளது. வரத்து குறைந்ததால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

ஆனால், மற்ற காலங்களில் பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால், உழைப்புக்கு ஏற்ற போதிய வருமானமின்றி தவிக்கிறோம். விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு கோட்டமலையாற்றில் அணை கட்ட வேண்டும். பூஞ்செடிகள் பயிரிடும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், சங்கரன்கோவில் பகுதியில் வாசனை திரவியம் தொழிற்சாலை தொடங்க வேண்டும்.

மொட்டு அழுகல் நோய்

பணகுடி கடம்பன்குளம் விவசாயி முருகன்:-

நான் அரை ஏக்கரில் மல்லிகை பயிரிட்டுள்ளேன். தற்போது பனிக்காலம் என்பதாலும், மொட்டு அழுகல் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதாலும் பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளது. முன்பு தினமும் 30 கிலோ பூக்களை பறித்த நிலையில் தற்போது கால் கிலோ பூக்களைக்கூட பறிக்க முடியவில்லை. இதற்காக அதிக விலைக்கு மருந்து வாங்கி தெளித்தாலும் போதிய விளைச்சல் கிடைக்கப்பெறவில்லை. இதனால் மற்ற நேரங்களில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறேன்.

பல வண்ண நிற பூக்கள்

நெல்லை இல்லத்தரசி செல்வி:-

மல்லிகை பூ, பிச்சி பூக்களையே விரும்பி அணிந்து கொள்வோம். ஆனால் அவற்றின் விலை தற்போது அதிகமாக உள்ளது. மேலும் மல்லிகை, பிச்சி பூக்கள் போதியளவு கிடைப்பதும் இல்லை. ஆனால் செவ்வந்தி பூ, ரோஜாப்பூ அதிகளவு கிடைக்கிறது. அதுவும் செவ்வந்தி பூ பல வண்ண நிறங்களிலும் கிடைக்கிறது. எனவே இந்த வகை பூக்களை அதிகளவும், மல்லிகை, பிச்சி பூக்களை குறைந்த அளவும் வாங்கி சூடிக் கொள்கிறோம்.

விழாவுக்கு அத்தியாவசியம்

தென்காசி இல்லத்தரசி மகாலட்சுமி:-

தற்போது வெளிநாட்டுக்கும் பூக்கள் ஏற்றுமதியாவதால் இங்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பூக்களின் விலை அதிகரித்து வருகிறது. எந்தவொரு விழாவுக்கும் பூக்களே அத்தியாவசியமாக தேவைப்படுவதால் அதிக விலை கொடுத்தும் பூக்களை வாங்கி பயன்படுத்துகிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்