கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள்

கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள் குறித்து கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

Update: 2022-12-03 18:45 GMT

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்துடன் ஊரக இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 18 முதல் 32 வயதுக்கு உட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி நிலையான வருமானம் ஈட்டும் வகையில் பயிற்சி வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் சுகாதார பராமரிப்பு, ஆயத்த ஆடை வடிவமைப்பு, கட்டுமான துறை, ஆட்டோமோட்டிவ், சில்லறை வணிகம், தளவாடங்கள், அழகு கலை, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் போன்றவற்றில் எளிதில் வேலைவாய்ப்பு பெற இயலும். 120-க்கும் மேற்பட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. எனவே இதன் கீழ் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மகளிர் திட்டம் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் அலுவலகத்தையோ அல்லது ஒவ்வொரு வட்டாரத்திலும் செயல்பட்டு வரும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தையோ அணுகி விவரங்களை பெற்று பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம். இதற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் நிறுவப்பட்டுள்ள வாழ்வாதார உதவி அழைப்பு எண் 155330-ஐ தொடர்பு கொண்டும் விவரங்களை கேட்டு அறியலாம்.

இந்த தகவலை, தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்