சிவசைலநாதர் கோவில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சிவசைலம் சிவசைலநாதர்- பரமகல்யாணி அம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-06-23 16:52 GMT

கடையம்:

சிவசைலம் சிவசைலநாதர்- பரமகல்யாணி அம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவசைலநாதர்

ஆழ்வார்குறிச்சியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சிவசைலம் உள்ளது. இந்த ஊரில் சுயம்பு மூர்த்தியாக தோன்றி சிவபெருமான்- பரமகல்யாணி அம்பாள் மேற்கு நோக்கி கோவில் கொண்டுள்ளனர். சிவ தலங்கள் மேற்கு திசை நோக்கி அமைந்து இருப்பது மிகவும் அரிது என்பதால் சிவசைலநாதர் கோவில் சிறப்புக்குரிய தளமாக கருதப்பட்டு வருகிறது.

இங்கு கடந்த ஒரு மாதமாக விழா பணிகள் தொடங்கின. கோவில் கோபுரங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டன. உட்புற சுவர்கள் தூண்கள், மண்டபங்கள் வண்ணம் பூசப்பட்டு அழகாக்கப்பட்டன.

வேள்வி பூஜைக்காக கோவிலின் பின்புறம் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டது. கடந்த 19-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. விழா நாட்களில் யாகசாலை பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் முதலே வெளியூர் பக்தர்கள் குவிந்தனர். நேற்று அதிகாலையில் சிவசைலம் கோவிலை சுற்றி பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கும்பாபிஷேகத்தை காண கோவிலின் மேல் தளத்திலும், சுற்றுப்பகுதிகளிலும், ஆற்று பாலத்திலும் பக்தர்கள் காத்திருந்தனர்.

காலை 10 மணிக்கு மேல் கோவில் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது பக்தர்கள் சிவசைலநாதரையும், பரமகல்யாணி அம்பாளையும் போற்றி பக்தி கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர். அதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில் தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டார்.

கடையம், திருமலையப்பபுரம், பொட்டல்புதூர், ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, சம்பன்குளம், ரவணசமுத்திரம், கோவிந்தப்பேரி, பாப்பான்குளம், வெள்ளிகுளம் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருக்கல்யாணம்

மாலையில் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு திரு வீதிஉலா நடைபெற்றது.

பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினார். கும்பாபிஷேக ஏற்பாடுகளை சென்னை சிம்சன் நிறுவன சேர்மன் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, தக்கார் கிருஷ்ணவேணி, ஆய்வாளர் சரவணகுமார், செயல் அலுவலர் அசோக்குமார் மற்றும் கும்பாபிஷேக குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்