சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - மேற்பார்வையாளர் கைது

விபத்து தொடர்பாக மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-18 09:49 GMT

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலை ஊராம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 20-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த இருளாயி (வயது48), குமரேசன்(30), அய்யம்மாள்(54), சுந்தர்ராஜ்(27) ஆகியோர் ஒரு அறையில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது வெப்பம் காரணமாக மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கியது.

இதில் 2 அறைகள் தரைமட்டமானது. விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். தொடர்ந்து பட்டாசு விபத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்திலேயே குமரேசன்(30), சுந்தர்ராஜ்(27) ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் இருளாயி (வயது48),அய்யம்மாள்(54) ஆகிய 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து தொடர்பாக மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் , பட்டாசு ஆலை மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்