திமுகவிலிருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி

திமுக-விலிருந்து நீக்கப்பட்ட தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-07-03 14:18 GMT

சென்னை,

சென்னை எருக்கஞ்சேரியில் ஜூன் 16ம் தேதி நடைபெற்ற கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு ஆளுநர் ரவி, அதிமுக பொது செயலாளஎ எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் குறித்து பேசியிருந்தார்.

இதுதொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கூட்டத்தினரை கவர்வதற்காக நகைச்சுவையுடன் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், யாரையும் குறிப்பிட்டு தவறாக பேசவில்லை எனவும் கூறிருந்தார்.

இந்த மனு சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, பெருநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இதேபோல் தொடர்ந்து பேசிவருவதாகவும், விசாரணை நிலுவையில் உள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி, உயர் பதவியில் இருப்பவர்கள் மற்றும் மாற்று கட்சியினர் குறித்து இழிவாகவும், அவதூறாகவும் மனுதாரர் பேசிவருவது, ஏற்கனவே இதேபோன்ற 3 வழக்குகள் உள்ளன போன்றவற்றை சுட்டிக்காட்டி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்