மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-06-19 18:55 GMT

திருச்சியை அடுத்த நம்பர் ஒன் டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு மணல்களை கொள்முதல் செய்ய தினசரி காலை 7 மணி முதல் அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் மாட்டு வண்டிகள் வரும் காலை நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் காலை 10 மணிக்கு மாட்டு வண்டிகள் மணலை கொள்முதல் செய்ய நேரம் மாற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 13-ந்் தேதி 110-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி மணல் தொழிலாளர்கள் மணல் சேமிப்பு கிடங்கில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் மாட்டுவண்டி தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் பழைய நடை முறையான காலை 7 மணி முதல் மணல் குவாரி செயல்பட அனுமதி வழங்கப்படும் என தெரிவித்ததன் பேரில் போராட்டத்தினை கைவிட்டனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து நேற்று அரசு மணல் குவாரியில் மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த லால்குடி தாசில்தார் விக்னேஷ்வரன், லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஓரிரு நாட்களில் முந்தைய நேரமான 7 மணிக்கு மணல் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படும். அப்போது, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வண்டிகளை ஓட்ட வேண்டும். மீறினால் மணல் கொள்முதல் நேரம் மீண்டும் 10 மணிக்கு மாற்றப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்