சீர்காழி தலைமை ஆசிரியருக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மயிலாடுதுறை மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலரின் உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.;

Update:2023-12-03 00:17 IST

கோப்புப்படம்

சென்னை,

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் கே.ராஜசேகர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், சீர்காழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1986-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். பின்னர் 2006-ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று சட்டநாதபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.

1987-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்த பாபு என்பவர் தற்போது புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் என்னைவிட பணியில் இளையவர். ஆனால், என்னை விட ரூ.4,400 அதிகமாக ஊதியம் பெற்று வருகிறார். ஊதியம் அதிகம் எனவே, எனக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரி மயிலாடுதுறை மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலரிடம் மனு கொடுத்தேன். ஆனால் அந்த மனுவை நிராகரித்து விட்டார். என்னை விட இளையவரான பாபுவுக்கு நிகராக ஊதியம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் வி. காசிநாத பாரதி ஆஜராகி, பணி விதிகளின்படியும், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்புகளின் படியும், பணியில் இளையவரை விட மூத்தவர் குறைவான சம்பளம் வாங்கக்கூடாது. அவ்வாறு வாங்கினால் அதை அரசு சரி செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கோரிக்கையை நிராகரித்த மயிலாடுதுறை மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலரின் உத்தரவை ரத்து செய்கிறேன். பணியில் இளையவரான பாபு பெறும் ஊதியத்தை மனுதாரருக்கும் 8 வாரத்திற்குள் அரசு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்