டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு அமைப்பு
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. தற்போது விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையி்ல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் கீதாஞ்சலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தற்போது டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது அவர்கள் நலமாக உள்ளனர். டெங்கு காய்ச்சல், ஏ.டி.எஸ்., ஏ.ஜி.ப்.டி. கொசுவகைகளால் பரப்பப்படும் வைரஸ் காய்ச்சல் ஆகும். காய்ச்சல், தலைவலி, நுரையீரலில் நீர் தேங்குவதால் ஏற்படும் மூச்சு திணறல், உடலின் பல பாகங்களில் ரத்தக்கசிவு ஏற்படுதல், சில நேரங்களில் உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழப்பு உள்ளிட்டவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாகும்.
பரிசோதனை உபகரணங்கள்
டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தற்போது மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கபட்டு உள்ளது. பெரியவர்களுக்கு 40 படுக்கைள் மற்றும் 5 தீவிர சிகிச்சை படுக்கையும், குழந்தைகளுக்கு 35 படுக்கைகளும், 5 தீவிர சிகிச்சை படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. வார்டில் போதுமான அளவில் கொசு வலைகளும் இருப்பில் உள்ளது. தற்போது டெங்கு காய்ச்சலுக்கு பரிசோதனை செய்யக்கூடிய தேவையான உபகரணங்கள் உள்ளது. வார்டில் சிகிச்சை பெறுபவர்களுக்கு நிலவேம்பு குடிநீர்,, ஓ.ஆர்.எஸ். உப்பு கரைசல் நீர், கஞ்சி ஆகியவை வழங்கப்படுகிறது. போதிய அளவிற்கு உயிர் காக்கும் மருந்துகள், ரத்தம் இருப்பில் உள்ளது. இன்று (அதாவது நேற்று) முதல் 24 மணி நேர புறநோயாளிகள் காய்ச்சல் பிரிவு செயல்படஉள்ளது. இது தவிர பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது நிலைய மருத்துவ அலுவலர் ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.