1293 அரசு பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் தூய்மைப்பணிகள்

விழுப்புரம் மாவட்டத்தில் 1293 அரசு பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் தூய்மைப்பணிகள் கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்

Update: 2022-09-24 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தமுள்ள 1,293 பள்ளிகளிலும் நேற்று ஒரே நேரத்தில் தூய்மைப்பணிகள் தொடங்கியது. விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் மோகன், துடைப்பத்தால் குப்பைகளை அகற்றி தூய்மைப்பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறும்போது, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் நடைபெறும் தூய்மைப்பணிகளில் முதன்மை கல்வி அலுவலர், 3 கல்வி மாவட்ட அலுவலர்கள், 26 வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் 7,137 தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் என மொத்தம் 7,877 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தூய்மைப்பணியின் முக்கிய நோக்கம் பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு ஆரோக்கியமான சுகாதார சூழ்நிலையை உருவாக்குவதாகும். ஒவ்வொரு பள்ளிகளிலும் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்து வரும் நிலையில் அவர்களுக்கு எவ்வித நோய்த்தொற்றும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் நாள்தோறும் தூய்மைப்பணிகள் நடைபெறவுள்ளது. எனவே பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையை நாள்தோறும் சுகாதாரமாக வைத்துக்கொள்ளும் வகையில் காலை, மாலை இருவேளையும் பிளிச்சிங் பவுடர், லைசால் உள்ளிட்டவை கொண்டு சுத்தம் செய்து சுகாதாரமாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்