வீடுகளுக்கு வினியோகம் செய்பவர்களும் கூடுதல் தொகை கேட்பதாக பொதுமக்கள் புகார்

Update: 2022-10-06 16:07 GMT

வீடுகளுக்கு வினியோகம் செய்பவர்களும் கூடுதல் தொகை கேட்பதாக பொதுமக்கள் புகார்

சோறு ரொம்ப முக்கியம். அந்த சோறுக்காக காலை முதல் தூங்கப்போகும் வரை மனிதன் படும் பாடு... அப்பப்பா சொல்லி மாளாது. சோறு சமைக்க விறகு அடுப்பை பற்ற வைத்தது ஒருகாலம். விறகு அடுப்பில் தீ அணைந்து விடாமல் பாதுகாக்க ஊதாங்குழல் ஊதி ரொம்ப நேரம் கஷ்டப்பட்டு, உணவை தயாரித்தனர். விறகு அடுப்பில் சமைத்த உணவு ருசிதனி. இயற்கையான முறையில் என்னதான் உணவு தயாரிக்கப்பட்டாலும் காற்று மாசுப்படுதல் மற்றும் இதற்காக பெண்கள் தங்களுடைய நேரத்தையும், சக்தியையும் அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் தற்போது கியாஸ் சிலிண்டரை திறந்து லைட்டரை பற்ற வைத்தால் சிறிது நேரத்தில் உணவு ரெடி. இதனால் மக்களின் நேரமும், சக்தியும் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக சமையல் கியாஸ் சிலிண்டர் ஆகியுள்ளது.

இந்த நிலையில் வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர் மாநகரை பொறுத்தவரை அதிகமான மக்கள் வசிப்பதால் கியாஸ் சிலிண்டரின் வினியோகம் அதிகரித்துள்ளது. இருந்தாலும் சமீபத்தில் ஏற்பட்ட கியாஸ் சிலிண்டரின் இமாலய விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். மேலும் இந்த சமையல் கியாஸ் சிலிண்டரை வீட்டிற்கு, கடைகளுக்கு கொண்டு சென்று சேர்க்கும் கியாஸ் சிலிண்டர் ஊழியர்களுக்கும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது.

இதுகுறித்து கியாஸ் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை கூறியதாவது:-

கூடுதல் தொகை வேண்டாம்

சாமியப்பன், (தனியார் கியாஸ் ஏஜென்சி மேலாளர்):-

நான் தனியார் கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறேன். பொதுமக்கள் கியாஸ் சிலிண்டருக்காக முன்பதிவு செய்து பெற்றுகொள்ளும்போது பில்லில் உள்ள தொகையைவிட கூடுதல் தொகை கொடுக்க தேவையில்லை. ஆனால் சில இடங்களில் வேலை செய்யும் கியாஸ் ஊழியர்கள் கூடுதல் தொகை வசூலிப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறது. பொதுமக்கள் கியாஸ் ஊழியர்களுக்கு அன்பின் அடிப்படையில் அவர்கள் செய்யும் வேலைக்காக அன்பளிப்பு (டீப்ஸ்) கொடுப்பது அவர்களுடைய விருப்பம். ஆனால் கியாஸ் ஊழியர்கள் யாரையும் கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்க கூடாது. அப்படி செய்வது தவறு. இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் பில்லில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அப்படி குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பொதுமக்கள் கியாஸ் சிலிண்டர் உபயோகிப்பதின் பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். கியாஸ் ஊழியர்கள் கொண்டு வரும் சிலிண்டர்களை சரிபார்த்து கசிவு ஏதேனும் இருக்கிறதா என்று பரிசோதனை செய்தபிறகு வாங்கி கொள்ள வேண்டும். அப்படி கசிவு இருந்தால் உடனடியாக மாற்றி கொள்ள வேண்டும். அப்போதுதான் விபத்துகள் எதுவும் ஏற்படாமல் தடுக்க முடியும்.

அதைபோல் 5 வருடங்களுக்கு ஒருமுறை கியாஸ் சிலிண்டர்களை அடுப்புடன் இணைக்கும் ரெகுலேட்டர்களை பரிசோதனை செய்ய வேண்டும். இதற்காக அந்தந்த கியாஸ் நிறுவனத்தின் மெக்கானிக்கை 1906 என்ற எண்ணில் தொடர்புகொண்டு அழைக்கலாம். அதற்கான கட்டணமாக ரூ.236 மட்டும் வசூலிக்கப்படும். இப்படி ரெகுலேட்டர்களை சோதித்து பார்த்து மாற்றுவது அவசியம். அப்போதுதான் கசிவு ஏற்படாமல் இருக்கும். ஒருநாளில் கியாஸ் ஊழியர்கள் 30 சிலிண்டர்கள் முதல் 60 சிலிண்டர்கள் வரை கொண்டு செல்கிறார்கள். தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதியில் சிலிண்டர்களை டெலிவரி செய்தபின் வீட்டிற்கு சென்று விடுகின்றனர். குறிப்பாக தினமும் காலை முதல் மாலை வரை 6 மணிநேரம் அல்லது 8 மணிநேரம் வேலை செய்கின்றனர். குறைந்தபட்ச வருமானமாக ரூ.9,000 வரை வாங்குகின்றனர்.

பொதுமக்கள் வீட்டில் இருப்பதில்லை

ரங்கநாதன், (கியாஸ் சிலிண்டர் ஊழியர்):-

நான் கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலையை 20 வருடங்களாக செய்து வருகிறேன். ஒரு நாளில் 2 முறை கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்ய போகிறேன். ஒரு முறைக்கு 30 சிலிண்டர் மற்றொரு முறைக்கு 20 சிலிண்டர் வரை என தினமும் குறைந்தபட்சம் 50 கியாஸ் சிலிண்டர்களை டெலிவரி செய்கிறேன். பொதுவாக வாடிக்கையாளர்களுக்கு கியாஸ் சிலிண்டரை டெலிவரி செய்ய போகும் போது அவர்கள் வீட்டில் இருப்பது இல்லை. இதன்காரணமாக 2 அல்லது 3 முறை அவர்களுடைய வீட்டிற்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் அதிகமாக சரக்கு ஆட்டோவில் செல்வதால் டீசல் வீணாகிறது. எனவே வாடிக்கையாளர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்ய போகும் போது வாடிக்கையாளர்கள் அன்பளிப்பாக ரூ.20 அல்லது ரூ.30 அவர்களாகவே தருகின்றனர். ஆனால் சில இடங்களில் பொதுமக்களை கட்டாயப்படுத்தி குறிப்பிட்ட தொகையை கேட்கிறார்கள். இது முற்றிலும் தவறான செயல், அப்படி செய்யக்கூடாது.

ஆனந்த், (கியாஸ் டெலிவரி ஊழியர்):-

நான் 25 வருடங்களாக கியாஸ் சிலிண்டர் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறேன். தற்போது கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கியாஸ் சிலிண்டர் விலை தெரியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். சில நேரங்களில் குறைவான பணம் மட்டுமே வைத்திருக்கின்றனர். அந்த சமயங்களில் வேறொருவரிடம் பணம் கேட்டு வாங்கி வரும்வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இன்னும் சில நேரங்களில் பணமே இல்லாமல் இருக்கும்போது அடுத்த நாள் கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்ய வர வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

மேலும் திருப்பூரில் உள்ள சாலைகள் மோசமாக உள்ளதால் கியாஸ் சிலிண்டரை டெலிவரி செய்ய கடினமாக இருக்கிறது. சில சாலைகளில் உள்ள குண்டு, குழியில் செல்லும்போது கியாஸ் சிலிண்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பள்ளத்தில் கியாஸ் சிலிண்டர் டெலிவரி வாகனம் சிக்கி கொள்ளும்போது வாகனத்தில் இருந்து 30 சிலிண்டர்களை இறக்கி வாகனத்தை பள்ளத்தில் இருந்து எடுத்து, பிறகு 30 சிலிண்டர்களையும் ஏற்றி கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே தார்ச்சாலை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விைலயை குறைக்க வேண்டும்

பேபி சுப்பிரமணியம், (பொதுமக்கள்):-

நான் குடும்பத்துடன் ஆலங்காடு பகுதியில் வசித்து வருகிறேன். தற்போது ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1130 ஆக இருக்கிறது. சாதாரணமாக 4 பேர் கொண்ட குடும்பத்தில் 28 நாட்கள் வரை மட்டுமே கியாஸ் சிலிண்டர் பயன்படுகிறது. அதன்பிறகு தீர்ந்துபோவதால் மீண்டும் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதன்காரணமாக கியாஸ் சிலிண்டருக்காக மாதம் மாதம் பெரும் தொகை செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் நடுத்தர குடும்பத்தினர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கியாஸ் சிலிண்டர் விலையை குறைத்து ரூ.700 அல்லது ரூ.800 என விற்றால் நன்றாக இருக்கும்.

24 மணி நேரமும் கியாஸ் சிலிண்டரை முன்பதிவு செய்ய முடிகிறது. அதேசமயத்தில் கியாஸ் சிலிண்டரை முன்பதிவு செய்த உடன் அடுத்தநாளே வந்து விடுகிறது. மேலும் கியாஸ் ஊழியர்கள் மாடி ஏறி வந்து டெலிவரி செய்வதால் அன்பளிப்பாக ரூ.30 கொடுக்கும்போது மகிழ்ச்சி அடைகின்றனர். பண்டிகை நாட்களில் மட்டும் ரூ.50 கேட்கிறார்கள்.

டெய்லர் மோகனா:-

நான் கணபதிபாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்ய வருவதற்கு முன் கியாஸ் ஊழியர்கள் எங்களுக்கு போன் செய்துவிட்டு வருகின்றனர். இதனால் கியாஸ் சிலிண்டர் வாங்குவதற்கு முன்கூட்டியே தயாராக இருக்க முடிகிறது. ஒருசமயம் கியாஸ் சிலிண்டரில் பழுது ஏற்பட்டபோது உடனடியாக ½ மணிநேரத்தில் கியாஸ் ஊழியர்கள் வந்து சரி செய்து கொடுத்தனர். பணம் எதுவும் வசூலிக்கவில்லை. தமிழக அரசு வழங்கும் மானியம் தற்போது ஒழுங்காக வழங்கப்படவில்லை. அதனை தொடர்ந்து வழங்கவும், கியாஸ் விலையை குறைக்கவும் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

தங்கவேல்சாமி:-

கியாஸ் சிலிண்டரை டெலிவரி செய்வதற்கு வரும்போது சில கியாஸ் ஊழியர்கள் கூடுதல் தொகை கேட்கிறார்கள். சிறிது தொகையை கொடுக்கும்போது குறிப்பிட்டு கேட்கிறார்கள். ஏன் இப்படி கேட்கிறீர்கள் என்று கேட்டால்? எல்லாரும் தருகிறார்கள் என்கிறார்கள். இதனால் நடுத்தர, ஏழை-எளிய குடும்பத்தினர் மிகவும் சிரமப்படுகின்றனர். சரி நேரடியாக கியாஸ் நிறுவனத்திற்கு சென்று வாங்க நினைத்தால் நேரம் இல்லாத காரணத்தினால் வாங்க முடிவதில்லை. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு கியாஸ் ஊழியர்கள், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்