மாணவ- மாணவிகள் 350 பேர் 2 மணிநேரம் சிலம்பம் சுற்றினர்

உலக சாதனை முயற்சியாக நாகையில், மாணவ- மாணவிகள் 350 பேர் 2 மணிநேரம் சிலம்பம் சுற்றினர்.

Update: 2022-06-11 14:38 GMT

நாகப்பட்டினம்:-

உலக சாதனை முயற்சியாக நாகையில், மாணவ- மாணவிகள் 350 பேர் 2 மணிநேரம் சிலம்பம் சுற்றினர்.

உலக சாதனை முயற்சி

நாகை அவுரி திடலில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உலக சாதனை முயற்சிக்காக சிலம்பம் சுற்றும் போட்டி நடந்தது. இதில் 350 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 2 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றினர்.

இந்த நிகழ்ச்சிக்கு நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். நகரசபை தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.

அமைச்சர் மெய்யநாதன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.1 லட்சம்

கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி சிலம்பம் சுற்றுதலில் உலக சாதனை முயற்சிக்கான நிகழ்ச்சி நடந்தது. சிலம்ப ஆசான்கள், பேராசான்கள் 100 பேரை தேர்வு செய்து ஒரு ஆசானுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதே போல் சிலம்பம் வீரர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 3 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்க தமிழக அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நகரசபை துணைத்தலைவர் செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், வீரத்தமிழர் சிலம்பாட்ட கழக நிறுவனர் தலைவர் சரவணன், பொருளாளர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்