பாதிரியார் வீடு முற்றுகை; தி.மு.க. கவுன்சிலரின் கணவர் உள்பட 10 பேர் கைது
தூய லூர்து அன்னை ஆலயத்தின் பங்கு பேரவை கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி பாதிரியார் வீட்டை முற்றுகையிட்ட தி.மு.க. கவுன்சிலரின் கணவர் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாதிரியார் வீடு முற்றுகை
அரியலூர்-திருச்சி சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தின் பங்கு வரவு-செலவு கணக்குகளை தெரிவிக்க வேண்டும். அதற்கு உடனடியாக பேரவைக்கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி ஆலயத்தின் பாதிரியார் டோமினிக் சாவியோ வீட்டை பங்கு உறுப்பினர்கள் நேற்று இரவு முற்றுகையிட்டனர். பின்னர் அவரது வீட்டின் நுழைவுவாயிலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் ஒயர்களை பிடுங்கி பப்ளிகாம் வைத்து மறைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்து சென்ற அரியலூர் மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் தலை மையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
10 பேர் கைது
ஆனால் உடன்பாடு ஏற்படாததால் தி.மு.க. கவுன்சிலர் சேசுமேரியின் கணவர் லீனஸ், வக்கீல் விஜி உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர்அவர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் அரியலூர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.
தவக்காலம் தொடங்கிய நிலையில் பாதிரியார் வீட்டை பங்கு உறுப்பினர்கள் முற்றுகையிட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.