பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.;
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், நெய்வேலி கிராமத்தில் தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்ற 70 பேருக்கு வேலை வாய்ப்பு அடையாள அட்டை வழங்கக்கோரி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ஸ்டாலினிடம் கோரிக்கை மனு வழங்கினர். ஆனால் இது வரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் கன்னியப்பன் தலைமையில் நேற்று காலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். சம்பவ இடத்துக்கு ஒன்றிய குழுத்தலைவர் வடமதுரை ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக வேலை வாய்ப்பு அடையாள அட்டை வழங்க வேண்டும் என தங்களது கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் எழுத்து மூலமாக 10 நாட்களுக்குள் வேலை வாய்ப்பு அடையாள அட்டை வழங்குவதாக உறுதி அளித்தார். அதன் பின்னர், அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் 2 மணி நேரம் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.