வளையப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு: வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை;96 பேர் கைது
மோகனூர்
சிப்காட் அமைக்க எதிர்ப்பு
மோகனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வளையப்பட்டி, அரூர், ஆண்டாபுரம், பரளி, என்.புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய ஊராட்சி பகுதியில் தமிழக அரசின் தொழில் துறை மூலம், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக நிலம் கையகப்படுத்துவதற்காக அப்பகுதிகளில் அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டால், ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், விவசாயமும் பாதிக்கப்படும். மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என கூறி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை ரத்து செய்யக்கோரி, தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை கைவிடக்கோரி, விவசாய முன்னேற்ற கழகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிப்காட் எதிர்ப்பு குழுவினர் மற்றும் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர், வளையப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
96 பேர் கைது
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து வருவாய் அலுவலர் அலுவலகம் முன்பு விவசாயிகள், பொதுமக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மோகனூர் போலீசார் 96 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து வளையப்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்டவர்களை விவசாய முன்னேற்ற கழக நிறுவனர் செல்ல.ராசாமணி, கொ.ம.தே.கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் உள்பட பல்வேறு தரப்பினர் சந்தித்தனா். தொடர்ந்து மாலையில் கைதானவர்கள் விடுவிக்கப்பட்டனர்.