குழந்தைகளுக்கு தவறாமல் வழங்க வேண்டும்

ஆரோக்கியத்துக்கு உதவும் குடற்புழு நீக்க மாத்திரைகளை குழந்தைகளுக்கு தவறாமல் வழங்க வேண்டும் என கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2023-02-14 18:45 GMT


ஆரோக்கியத்துக்கு உதவும் குடற்புழு நீக்க மாத்திரைகளை குழந்தைகளுக்கு தவறாமல் வழங்க வேண்டும் என கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி அறிவுறுத்தி உள்ளார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகை அருகே பாப்பாக்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். சுகாதார செவிலியர் ராணி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி பேசும்போது கூறியதாவது:-

குடல் புழுக்கள் மனித குடலில் காணப்படும் ஒட்டுண்ணிகள் ஆகும். இவை சிறு குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதற்காக வழங்கப்படும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களால் செழித்து வளர்கின்றன. இரைப்பை குழாயில் காணப்படும் இந்த புழுக்கள் குழந்தைகளின் இளம் பருவத்தில் நிகழ வேண்டிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை தடுக்கின்றன.

ரத்தசோகை- அஜீரணம்

மண்ணில் இருக்கும் ஒட்டுண்ணிப் புழுக்கள் மனிதர்கள் உடலில் நுழைந்து வளர்ச்சி தடை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இப்படி உள்நுழையும் புழுக்கள் குடலுக்குள் சென்று பலவீனம், ரத்த சோகை, அஜீரணம், எடை இழப்பு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி உள்ளிட்ட பல கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.

எனவே குழந்தைகள் மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை தவறாமல் வழங்க வேண்டும். இந்த மாத்திரைகள் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு உதவும். குழந்தைகளிடம் கைகளை சுத்தமாக கழுவி அதன் பின்னர் உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தேசிய குடற்புழு நீக்க நாள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் பள்ளி மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்