கடலூர் பஸ் நிலையத்தில்வாடகை பாக்கி செலுத்தாததால் கடைகளுக்கு சீல் வைக்க முயற்சிஅதிகாரிகளை வியாபாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
கடலூர் பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாததால் கடைகளுக்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகளை, வியாபாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.;
கடலூர் மாநகராட்சிக்கு சொந்தமாக பஸ் நிலையத்தில் 116 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு மாநகராட்சி மூலம் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்து கடைகளுக்கும் வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதனால் பஸ் நிலையத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகள் பல ஆண்டுகளாக வாடகை செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
அந்த வகையில் கடைக்காரர்கள், மாநகராட்சிக்கு சுமார் ரூ.9 கோடி வாடகை பாக்கி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர்கள் கடந்த சில நாட்களாக வாடகை வசூலிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சீல் வைக்க முயற்சி
இந்நிலையில் பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி வைத்துள்ள 10 கடைகளுக்கு சீல் வைக்க நேற்று காலை மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் பாஸ்கரன், ராஜேந்திரன், அசோகன், ஜெயசங்கர் மற்றும் வருவாய் உதவி ஆய்வாளர்கள் வந்தனர். அப்போது வியாபாரிகள், மாநகராட்சி வாடகைதாரர் சங்க தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன் தலைமையில் திரண்டு வந்து அதிகாரிகளை சீல் வைக்க விடாமல் தடுத்தனர்.
மேலும் மாநகராட்சி கவுன்சிலர்கள் தமிழரசன், கர்ணன், பாரூக் அலி, தஷ்ணா, சரத் ஆகியோரும் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், கொரோனாவுக்கு முன்பு ரூ.3 ஆயிரம் வாடகை வசூலிக்கப்பட்ட கடைகளுக்கு 10 மடங்கு உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.30 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. அந்த வாடகையையும் 2016-ம் ஆண்டை கணக்கிட்டு முன்தேதியிட்டு கட்ட வேண்டும் என்பது ஏற்புடையதல்ல.
சாவியை ஒப்படைப்போம்
அனைத்து கடைக்காரர்களுக்கும் சரியாக வியாபாரம் இல்லாத நிலையில், 10 மடங்கு உயர்த்தப்பட்ட வாடகையை எவ்வாறு செலுத்த முடியும். அதனால் முதல்-அமைச்சர் உத்தரவுப்படி நகராட்சி நிர்வாக இயக்குனரால் அமைக்கப்பட்ட குழுவினர் வந்து அனைத்து கடைகளையும் பார்வையிட்டு, அவர்கள் என்ன வாடகை நிர்ணயம் செய்கிறார்களோ அந்த தொகையை தான் நாங்கள் கட்டுவோம். அந்த வாடகையை எங்களால் கட்ட முடியவில்லை என்றால் கடைகளின் சாவியை மாநகராட்சியில் ஒப்படைத்து விடுகிறோம் என்றனர்.
அதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் சீல் வைக்கும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.