கடையில் புகுந்து பெண்ணிடம் 3½ பவுன் நகை பறிப்பு

கோவில்பட்டியில் கடையில் புகுந்து பெண்ணிடம் 3½ பவுன் நகையை மர்மநபர் பறித்து சென்றார்.

Update: 2023-09-16 18:45 GMT

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலம் சண்முகசிகாமணி நகரை சேர்ந்தவர் செந்தில்ராஜ். இவருடைய மனைவி சண்முகத்தாய் (வயது 56). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் சண்முகத்தாய் கடையில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் பிஸ்கட் வேண்டும் என்று கேட்டார்.

உடனே சண்முகத்தாய் பிஸ்கட் எடுக்க கடைக்குள் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற மர்மநபர், அவரது கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்கச்சங்கலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகத்தாய் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்மநபர், மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து சண்முகத்தாய் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்