பட்டா நில கட்டிடங்கள் அகற்றப்படுவதை நிறுத்தகோரிமானியதஅள்ளி ஊராட்சி அலுவலகத்தில் கடை உரிமையாளர்கள் தர்ணா
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே மானியதஅள்ளி ஊராட்சி ஜருகு கிராமத்தில் 4 ரோடு சந்திப்பு சாலை, ஜருகு சந்தைக்கு செல்லும் சாலையின் இருபுறமும் பல்வேறு வணிக நிறுவனங்கள், பேக்கரிகள், ஜவுளிக்கடைகள் மற்றும் ஓட்டல்கள், டீக்கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர் புகார் சென்றதால், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் சாலையின் இருபுறமும் உள்ள கட்டிட ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.
இதற்கிடையே பட்டா நிலங்களில் உள்ள கட்டிடங்களை அகற்றுவதை நிறுத்தக்கோரியும், கடைகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ள ஊராட்சியின் குப்பை சேமிப்பு தொட்டிகளை அப்புறப்படுத்திட வலியுறுத்தி மானியதஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கடை உரிமையாளர்கள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து வந்த நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் மற்றும் தொப்பூர் போலீசார் கடை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் பட்டா நிலத்தில் உள்ள கட்டிடங்கள் அகற்றப்படாது. கடைகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ள குப்பை சேமிப்பு தொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்தனர். பின்னர் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கடை உரிமையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது,