கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் 29-ந் தேதி கடையடைப்பு

வனத்தின் கரையோரம் 1 கி.மீ. தூரம் கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கப் பட்டதற்கு கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் வருகிற 29-ந் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.

Update: 2022-08-24 15:14 GMT

கூடலூர், 

வனத்தின் கரையோரம் 1 கி.மீ. தூரம் கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கப் பட்டதற்கு கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் வருகிற 29-ந் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.

கட்டிடங்கள் கட்ட தடை

நாடு முழுவதும் தேசிய வன உயிரின காப்பகத்தின் கரையோரம் 1 கி.மீட்டர் தூரம் சூழல் உணர்திறன் மண்டல பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றி நிரந்தர கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பளித்தது. இது தொடர்பாக மாநில அரசுஆய்வு நடத்தி 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கூறியது.இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தின் கரையோரம் உள்ள மசினகுடி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை ஊராட்சிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

இந்தநிலையில் கூடலூர் வணிகர் சங்க அலுவலக கட்டிடத்தில் அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அப்துல் ரசாக், தமிழ்நாடு வணிகர் சங்க மாநிலத் துணைத்தலைவர் தாமஸ் உள்ளிட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்த போது கூறியதாவது:-

கடையடைப்பு

உச்ச நீதிமன்றம் அளித்த 3 மாத கால அவகாசம் முடிவடைவதால் அரசு தரப்பில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் 1 கி.மீட்டர் தூரம் கட்டிடங்கள் கட்ட தடை பிரச்சினை இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கும். ஆனால், தமிழக அரசின் சார்பில் எந்தவிதமான உத்தரவாதமும் மக்களுக்கு அளிக்க வில்லை. எனவே, இந்த சட்டத்தினால் கூடலூர் பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் இன்று (வியாழக்கிழமை) முதல் கூடலூர், பந்தலூர் தாலுகா மற்றும் மசினகுடி, நடுவட்டம் பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் கடைகளிலும் கருப்பு கொடிகள் ஏற்றப்படும்.

வருகிற 29-ந் தேதி காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள், மசினகுடி, நடுவட்டம் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்