சிவசேனா, இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கைது

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக சிவசேனா, இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-07 20:45 GMT

போராட்டம் அறிவிப்பு

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு சனாதனம் தொடர்பாக பேசினார். இது நாடு தழுவிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சரின் பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஆங்காங்கே போராட்டங்களும் நடக்கின்றன.

இந்த நிலையில் சனாதனம் தொடர்பாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, திண்டுக்கல்லில் நேற்று இந்து அமைப்பினர் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். ஆனால் இந்து அமைப்பினரின் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனினும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் பரவியது.

நிர்வாகிகள் கைது

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளர் சி.கே.பாலாஜி, இந்து மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா, இளைஞர் அணி துணை தலைவர் மோகன்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் உள்பட முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே சிவசேனா மற்றும் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். மேலும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை விடுவிக்கக்கோரியும் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் மதியம் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்