சுய உதவிக்குழுக்களை தொழில் நிறுவனங்களாக மாற்ற வேண்டும் கருத்தரங்கில் கலெக்டர் ஸ்ரீதர் பேச்சு

குமரி மாவட்டத்தில் உள்ள சுய உதவிக்குழுக்களை தொழில் நிறுவனங்களாக மாற்ற வேண்டும் என்று கருத்தரங்கில் கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

Update: 2023-07-31 18:26 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் உள்ள சுய உதவிக்குழுக்களை தொழில் நிறுவனங்களாக மாற்ற வேண்டும் என்று கருத்தரங்கில் கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

விழிப்புணர்வு கருத்தரங்கு

குமரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (ஸ்டார்ட் அப் தமிழ்நாடு), மகளிர் திட்டம் ஆகியவை சார்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தயாரித்த பொருட்களை உலக சந்தையில் விற்பனை செய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கருத்தரங்கை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சுய உதவி குழுவினர் பல்வேறு தொழில்கள் செய்து அவர்கள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சுயஉதவி குழுக்கள் மாநிலத்தின் பொருளாதாரத்தில் சிறப்பான பங்கை ஆற்றி வருகின்றன.

உலக சந்தைக்கு...

குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து உலக சந்தைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை ஸ்டார்ட்அப் தமிழ்நாடு மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டங்களை அனைத்து சுய உதவி குழுவினரும் பயன்படுத்தி உற்பத்தி பொருட்களை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும்.

குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து சுய உதவி குழுக்களும் குறுகிய வட்டத்திற்குள் நின்று விடாமல் பெரும் தொழில் நிறுவனங்களாக மாற்ற அதன் உறுப்பினர்கள் முன் வரவேண்டும். அதற்கான பயிற்சிகள் அளிப்பதற்கு ஸ்டார்ட் அப் தமிழ்நாடு பெரும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சுய உதவிக்குழுவினர் தயாா் செய்திருந்த பொருட்களை கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டார்.கருத்தரங்கில் மகளிர் திட்ட இயக்குனர் பேபி ஜாண், திருநெல்வேலி மண்டல ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அலுவலர் ராகுல், இணை அலுவலர் ஜிஜின் துரை, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் லட்சுமி காந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்