கேளம்பாக்கம் அருகே ஷேர் ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதல்; 2 பெண்கள் பலி - 7 பேர் படுகாயம்

கேளம்பாக்கம் அருகே ஷேர் ஆட்டோ மீது கார் நேருக்கு- நேர் மோதிய விபத்தில், 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.;

Update:2023-02-04 14:09 IST

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள கழிப்பட்டூரை சேர்ந்தவர் தசரதன் (வயது 50). இவர், தனக்கு சொந்தமான ஷேர் ஆட்டோவை நாவலூர் மற்றும் திருப்போரூர் இடையே ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை 10 பயணிகளுடன் கேளம்பாக்கத்தில் இருந்து திருப்போரூர் நோக்கி ஆட்டோவை ஓட்டிச் சென்றபோது, காலவாக்கம் அருகே பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால், சாலையில் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றதால், பொறுமை இழந்த ஆட்டோ டிரைவர் தசரதன், சாலை தடுப்பில் உள்ள இடைவெளியை பயன்படுத்தி, எதிர் திசையில் திடீரென பயணிக்க ஆரம்பித்ததாக தெரிகிறது.

அப்போது எதிரே ஆலத்தூரை சேர்ந்த மேத்யூ என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், ஆட்டோவின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த டிரைவர் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்த வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆட்டோவில் பயணம் செய்த செம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விஜயா (44), சிறுதாவூர் கிராமத்தை சேர்ந்த அம்சவள்ளி (53) ஆகிய 2 பேர் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், சுவாதி (32), ஜோதி (52), செல்வி (40), அஞ்சலை (38), திலகவதி (45), முனுசாமி (என்ற) சுரேஷ் (50) மற்றும் ஆட்டோ டிரைவர் தசரதன் (50) ஆகிய 7 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷேர் ஆட்டோ டிரைவரின் அவசர புத்தியால் நடந்த விபத்தில் 2 பெண்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்